Latestமலேசியா

பணியிலிருந்த தீயணைப்பு வீரரைக் குத்தினார்; ஆடவருக்கு அபராதம் – சிறை!

காஜாங், அக் 20 – காரில் ஏற்பட்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரரைத் தாக்கிக் காயப்படுத்தியதற்காகவும், வேகமாகக் காரை ஓட்டியதற்காகவும் ஆடவர் ஒருவருக்கு காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 6 மாத சிறை மற்றும் ஆறாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

தீயணைப்பு வீரர் அல்ஃபிரெட் ரூடி அனாக் துங்கு (Alfred Rudy Anak Tungku)வைத் தாக்கிக் காயப்படுத்தியதை, கான் ஹோங் கிட் (Kan Hong Kit) எனும் அந்த 33 வயது ஆடவர் ஒப்புக் கொண்டதை அடுத்து நீதிபதி அவருக்கு அத்தண்டனையை வழங்கியுள்ளார்.

கடந்த 15ஆம் தேதி செராஸின் ஒன்பதாவது மைலில் நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது தீயில் எரிந்து கொண்டிருந்த தம்முடைய காரின் அருகே செல்ல முயன்ற அவ்வாடவரை, தீயணைப்பு வீரர் அல்ஃபிரெட் தடுத்துள்ளார்.

அப்போது திடீரென மூர்க்கத்தனமான மாறிய அவ்வாடவர், அல்ஃபிரெட்-டை பலம் கொண்டு ஓங்கிக் குத்தியுள்ளார்.

அரசு பணியாளர்கள் மீது இதுபோன்று தாக்குதல் நடத்துவது ஏற்புடைய செயல் அல்ல என நீதிபதி கூறினார்.

ஆனாலும் இது அவரது முதல் குற்றம் என்பதாலும், குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதாலும், குறைந்த பட்ச தண்டனையாக 6 மாத சிறை, ஆறாயிரம் ரிங்கிட் அபராதம் விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

மற்ற வாகனமோட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகக் காரை வேகமாக ஓட்டியதாக, தம்மீது சுமத்தப்பட்டிருந்த இரண்டாவது குற்றச்சாட்டையும் கான் ஹோங் கிட் ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து கான் ஹோங் கிட்-டின் வாகனமோட்டும் உரிமத்தை ஈராண்டுகளுக்கு முடக்குவதாக நீதிபதி தமது தீர்ப்பில் அறிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!