
கோலாலம்பூர், ஜன 23- இவ்வாண்டு பத்துமலை தைப்பூசத்திற்கு ரத ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார். ஜாலான் பண்டார் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பத்துமலைக்கான ரதம் அடுத்த வாரம் புதன்கிழமை ஊர்வலமாக செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் 10க்கும் மேற்பட்டோர் ரத ஊர்வலத்தில் செல்வதற்கு அனுமதியில்லை. அதோடு பத்துமலை சென்றடையும்வரை ரதம் ஊர்வலத்தின்போது எங்கும் நிற்பதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அனுவார் மூசா தெரிவித்தார்.
ஜாலான் பண்டார் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து தைப்பூசத்திற்கு முதல் நாள் ரதம் ஊர்வலம் பத்துமலை திருத்தலத்திற்கு செல்வதற்கும் தைப்பூசத்திற்கு மறுநாள் ரதம் மீண்டும் ஜாலான் பண்டார் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு திரும்புவதற்கும் தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி வழங்கியிருப்பதாக அனுவார் மூசா தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ரதம் ஊர்வலத்தின்போது நாதஸ்வரம் மற்றும் மேள தாளத்திற்கும் அனுமதிக்கப்படவில்லை. இரத ஊர்வலத்தின்போது SOP முழுமையாக பின்பற்றப்படுவதை கோலாலம்பூர் மாநகர் மன்றம் கண்காணிக்கும் என அனுவார் மூசா தெரிவித்தார்.