
கொழும்பு , ஜன 11- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை நாய் போல நந்திக் கடலிலிருந்து இழுத்து வந்து தாம் விடுதலை புலிகளின் போராட்டத்தை முடித்து வைத்தாக இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச மிகவும் திமிராக பேசிய பேச்சு இலங்கை தமிழர்களை கொதிப்படையச் செய்துள்ளது.
பாதுகாப்பு செயலாளராக தாம் இருந்தபோது பித்தளைச் சந்தியில் தம்மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தி புலிகளின் தலைவர் பிரகாகரன் வேலையை ஆரம்பித்தார். 2009ஆம் ஆண்டு நடந்த இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்ட யுத்தம் நந்திக் கடல் பகுதியில் நடந்தபோது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் அப்பகுதியில் கிடைத்ததாக இலங்கை அரசு தமக்கு தெரிவித்ததாக மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசியபோது அவர் தெரிவித்தார்.
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தின் போது இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக இருந்தவர் கோட்டாபய . அந்தப் போரில் விடுதலைப் புலிகளை அழித்ததற்கு பெரிதும் காரணமாக இருந்தவர் என்று சிங்கள மக்கள் அவரை கருதுகின்றனர். அந்த போரின்போது கடுமையான அணுகுமுறையைக் கையாண்டதோடு மோசமான போர் குற்றங்களுக்கு காரணமாக இருந்ததாக இலங்கை தமிழர்களால் கடுமையாக கோட்டாபய ராஜபக்ச விமர்சிக்கப்படுகிறார்.