Latestஉலகம்

பிரான்ஸில் ஆசிரியர் சிரச்சேதம்; குறி வைத்துத் தாக்கிய தீவிரவாதி!

பேரிஸ், அக் 18 – பிரான்ஸில் ஆசிரியர் ஒருவரை சிரச்சேதம் செய்த ஆடவன், தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக பள்ளிக்கு வெளியே காத்திருந்து, தாம் குறி வைத்திருப்பது சரியான ஆள் தானா என்பதை மாணவர்களிடம் கேட்டு உறுதிச் செய்திருந்தது தெரிய வந்துள்ளது.

47 வயது சாமுவேல் பெத்தி (Samuel Paty) எனும் அந்த ஆசிரியர், முகமது நபியின் சர்ச்சைக்குரிய கார்ட்டூன் சித்திரங்களைத் தனது மாணவர்களிடம் காண்பித்தபடி பாடம் நடத்தியதால் அவரை சிரச்சேதம் செய்ததாக, அவ்வாடவன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அதோடு தாம் துண்டித்தத் தலையையும் முகநூலில் பதிவேற்றியிருந்தான் அவ்வாடவன்.

அவ்வாடவனை பின்னர் போலீசார் சுட்டுக் கொன்ற நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பத்து பேரைக் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இஸ்லாமிய தீவிரவாத கும்பலுடன் தொடர்பிருப்பதாக போலீஸ் நம்புகிறது.

போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் மோஸ்கோவ் (Moscow)வில் பிறந்த 18 வயது அப்துல்லாக் (Abdoulakh) என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் அகதியாக பிரான்சுக்குள் நுழைந்தவர் என்றும் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது பள்ளி முடிந்து கால் நடையாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த அந்த ஆசிரியரைப் பின் தொடர்ந்த அவ்வாடவன், பின்னர் அவரைக் கத்தியால் தாக்கி, தலையைத் துண்டித்தான்.

ஆசிரியர், முகமது நபியை அவமதிக்கும் வகையிலான கேலிச் சித்திரங்களை மாணவர்களிடம் காண்பித்த சம்பவம் சில பெற்றோருக்கு அதிருப்தியையும், அந்த ஆசிரியர் மீது சினத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் உயிரிழந்த ஆசிரியருக்காக வரும் புதன்கிழமையன்று துக்கம் அனுசரிக்கப்படும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்தார்,

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!