Latest

புதன்கிழமை முதல் இந்திய விமானங்கள் மலேசியாவில் நுழைய தற்காலிக தடை

கோலாலம்பூர், ஏப் 26- புதன்கிழமை ஏப்ரல் 28ஆம் தேதியிலிருந்து இந்தியா விமானங்கள் மலேசியாவில் நுழைவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோலாலம்பூரிலிருந்து விமானங்கள் இந்தியா செல்வதற்கும் அங்கிருந்து விமானங்கள் இங்கு வருவதற்கும் மலேசியா தற்காலிகமாக தடை விதித்துள்ளது. பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி இதனை தெரிவித்தார்.

மலேசிய வேலை பெர்மிட்டை கொண்டிருக்கும இந்திய பிரஜைகளைக் கொண்ட கப்பல்களும் நாட்டில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படும். எனினும் அந்த கப்பல்களில் வேலை செய்யும் மலேசிய பிரஜைகள் நாட்டிற்குள் வந்தால் கட்டாயமாக 14 நாட்கள் தனித்திருக்கும் நடைமுறையில் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்திருந்த ஆலோசனையை தேசிய பாதுகாப்பு மன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து இங்கு வரும் மற்றும் இந்தியாவுக்கு புறப்படும் விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிப்பதற்கு தேசிய பாதுகாப்பு மன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் எந்த பகுதிகளிலிருந்தும் வரும் அனைத்து பயணிகளும் நேரடியாகவோ அல்லது டிரான்சிட் விமானங்கள் மூலம் மலேசியாவுக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து மூன்றாவது நாடடிற்கு செல்லும் பயணிகளுக்கும் இந்த தடை அடங்கும். .
கடந்த 14 நாட்களில் இந்தியாவில் நங்கூரமிட்ட கப்பல்கள் மலேசியாவிற்குள் நுழைய முடியாது. மலேசிய பிரஜைகள் அந்த கப்பலின் ஊழியர்களாக இருந்தால் நாட்டிற்குள் நுழைந்தவுடன் 14 நாட்கள் தனித்திருக்க வேண்டும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

இந்தியாவிவைச் சேர்ந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் மலேசியாவில் சட்டப்பூர்வ தற்காலிக வேலை பாஸ்களை கொண்டிருந்தாலும் அவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது. அதோடு இந்தியாவைச் சேர்ந்த வர்த்தக பயணிகள் மற்றும் அனைத்துலக மாணவர்களுக்கும் தற்காலிக தடை விதிக்கப்படுவதாகவும் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

எனினும் மலேசிய மாணவர்கள், தொழிலாளர்கள், கணவன் அல்லது மனைவியர் மற்றும் தற்போது இந்தியாவில் இருந்துவரும் மலேசிய பிரஜைகளின் பிள்ளைகள், இந்தியாவுக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ள சமய குழுவினர் நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவர். ஆனால் இவர்கள் தனித்திருக்கும் மையங்களில் 14 நாட்கள் தனித்திருக்க வேண்டும்.

மலேசிய பிரஜைகளை திருமணம் செய்திருக்கும் மலேசிய பிரஜை அல்லாத இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவர். ஆனல் அவர்கள் நாட்டில் நுழைந்தவுடன் தனித்திருக்க வேண்டும். அனைத்து தடைகளும் ஏப்ரல் 28 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் கோவிட் தொற்று வேகமாக பரவி வருவதைத் தொடர்ந்து மலேசியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!