
புக்கிட் காயு ஹீத்தாம் , நவ 26 – மலேசிய – தாய்லாந்து எல்லையில் பொது தற்காப்புப் படையின் மேலும் ஒரு உறுப்பினர் நேற்று சுடப்பட்டார். மாலை மணி 6 .15 அளவில் புக்கிட் காயு ஹீத்தாம் எல்லைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென துப்பாக்கிச் சூட்டு காயத்திற்கு அந்த உறுப்பினர் உள்ளானார்.
அண்டை நாட்டிலிருந்து வந்தவர்களால் சுடப்பட்ட நபர்களின் தோட்டா எல்லை பொது பாதுகாப்பு படையின் உறுப்பினரின் வயிற்றுப் பகுதியில் பாய்ந்ததாக கூறப்பட்டது. தற்போது அந்த உறுப்பினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என கெடா போலீஸ் தலைவர் டத்தோ ஹசானுடின் ஹசான் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மலேசிய – தாய்லாந்து எல்லைப் பகுதியில் சுடப்பட்ட பொது தற்காப்பு படையின் மூன்றாவது உறுப்பினர் அவராவார். அதோடு மலேசிய பொது பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
இதனிடையே கெடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கடத்தல்காரர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது செவ்வாய்க்கிழமையன்று துப்பாக்கி சூட்டு காயத்திற்கு உள்ளான பொது தற்காப்பு படையின் உறுப்பினர் சர்ஜன்ட் நோரிஹான் தாரியின் உடலில் பாய்ந்த தோட்டாவை அகற்றுவதற்காக கங்கார் துங்கு பவ்ஷியா மருத்துவமனையிலிருந்து பினாங்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அந்த சம்பவத்தின்போது துப்பாக்கிச் சூட்டு காயத்திற்குள்ளான 54 வயதுடைய சார்ஜன்ட் பஹாருடின் ரம்லி மரணம் அடைந்தார்.