Latestமலேசியா

ஸ்பான்கோ ஒப்பந்த முறைகேட்டில் எனக்குத் தொடர்பா? முஹிடின் மறுப்பு!

கோலாலம்பூர், பிப்ரவரி 24 – அரசாங்க வாகனங்களின் கொள்முதல் மற்றும் நிர்வகிப்பு குத்தகை, SPANCO நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதில் நடந்துள்ள முறைகேட்டில் தாம் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை முன்னாள் பிரதமர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் மறுத்துள்ளார்.

தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அரசியல் எதிரிகள் நடத்தும் சித்து விளையாட்டே அதுவென முஹிடின் சாடினார்.

தாம் பிரதமராக இருந்த 2020 மார்ச் – 2021 ஆகஸ்ட் காலக்கட்டத்தில் நிதி அமைச்சின் கீழ் வரும் எந்தவொரு ஒப்பந்தமும் தமது கவனத்துக்கு வரவும் இல்லை, தாம் கையெழுத்திடவும் இல்லை என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

SPANCO குத்தகை விஷயத்தில் தம்மைக் கேட்டால், முன்னதாக இன்னொரு நிறுவனத்துக்கு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வணிகக் குத்தகைக்கான கடிதம் (LOI) ரத்தானதற்கான காரணத்தை இன்றைய அரசாங்கம் வெளியிட வேண்டும். அதே சமயம் SPANCO நிறுவனத்துக்குக் குத்தகை வழங்கப்பட்ட நாள் உள்ளிட்ட தகவல்களும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்; அம்முக்கியத் தகவல்கள் அனைத்தும் கண்டிப்பாக நிதி அமைச்சின் வசம் இருக்கும் என முஹிடின் சொன்னார்.

தம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைப்பது அரசியல் எதிரிகளுக்கு வழக்கமாகி விட்டதாகச் சாடிய முஹிடின், ” நிதி அமைச்சராகவும் உள்ள பத்தாவது பிரமருடன் என்னை ஒப்பிடாதீர்கள். என் இடத்தை நான் அறிவேன்” என காட்டமாகக் கூறினார்.

1990-களில் SPANCO நிறுவனத்துடன் கையெழுத்தான ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இதுவரை 20-க்கும் மேற்பட்ட சாட்சிகளை அழைத்திருக்கிறது.

SPANCO விவகாரத்தில் ஒரு முன்னாள் பிரதமர், மற்றும் நிதியமைச்சர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என கடந்த மாதமே ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஜனவரி 20-ஆம் தேதியன்று, தான் ஸ்ரீ பட்டத்தைக் கொண்ட ஒரு தொழில் அதிபர் வீட்டில் சோதனை நடத்தியது.

SPANCO ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது; அவற்றில் 3 முதலீட்டு நிறுவனங்கள் அந்த தான் ஸ்ரீ- க்குச் சொந்தமானவை.

அந்த தான் ஸ்ரீ, அரசாங்கத்துக்கு வாகனங்களைக் கொள்முதல் செய்யும் நிறுவனத்தின் முதன்மைப் பங்குத்தாரர் என்றும் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!