
கோலாலம்பூர், நவ 21- டி.பி.கே.எல் எனப்படும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் வெளியிட்டுள்ள மதுபான விற்பனைக்கான வழிகாட்டுதல் சமய மற்றும் இன நோக்கத்தை கொண்டதல்ல.
மதுபானங்கள் தொடர்பான ஐரோப்பா உட்பட இதர நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட வழிகாட்டதலுக்கு ஏற்பவே இது அமைந்திருப்பதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்தார். ஐரோப்பாவில்கூட மதுபானங்கள் வாங்குவதற்கு நேரம் மற்றும் எந்த இடத்தில் விற்கப்பட வேண்டும் என வழிகாட்டல்கள் இருப்பதை அனுவார் மூசா சுட்டிக்காட்டினார்.
மளிகைக் கடைகளிலும் , மினி மார்க்கெட்டுகளிலும் பாக்கேட்டுகளில் அடைக்கப்பட்ட சாரயம் மற்றும் போதையை ஏற்படுத்தும் மதுபானங்கள் விற்கப்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார் எழுந்ததைத் தொடர்ந்து அதன் விற்பனை தொடர்பில் புதிய வழிகாட்டல் உருவாக்கப்பட்டது.
வயது குறைந்த பதின்ம வயதினர் மற்றும் மாணவர்களிடம்கூட மதுபானம் விற்கப்படுகிறது. அதோடு மதுபானங்கள் அனைத்து இடங்களிலும் விற்கப்படுகிறது என்ற புகாரும் எழுந்துள்ளதாக அனுவார் மூசா கூறினார்.
அடுத்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதியிலிருந்து மளிகைக் கடைகள் மற்றும் சில்லறைக் கடைகளில் மதுபானங்கள் விற்பனைக்கான லைசென்ஸ் வழங்கப்படாது அல்லது புதுப்பிக்கப்படாது என அண்மையில் கோலாலம்பூர் மாநார் மன்றம் அறிவித்தது.