Latestமலேசியா

மனைவி பிள்ளையைக் காணாத ஏக்கம் – சிங்கப்பூரில் 8ஆவது மாடியிலிருந்து குதித்து மலேசியர் தற்கொலை!

ஜோகூர் பாரு, அக் 18 – சிங்கப்பூரில் வேலை செய்து வந்த மலேசிய ஆடவர் ஒருவர், தனது மனைவி பிள்ளையைக் காண முடியாத ஏக்கத்தால், தாம் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரிலேயே சிக்கிக் கொண்டிருந்த அவ்வாடவர், தனது மனைவியையும் 4 வயது பெண் பிள்ளையையும் காண முடியாத ஏக்கத்தில் அவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் பட்டுவாடா நிறுவனமொன்றில் வேலை செய்து வந்த அவ்வாடவரின் இம்முடிவுக்கு பணிச் சுமையும் ஒரு காரணம் என நம்பப்படுகிறது.

தமக்கு வேலையிடத்தில் அதிக நெருக்கடி தரப்படுவதாகவும், இதனால் தமக்கு நாளுக்கு நாள் மன அழுத்தம் அதிகரிப்பதாகவும் அவர் தமது மனைவியிடம் தொலைபேசி வாயிலாகக் கூறி புலம்பி வந்ததாக, தம்மை அடையாளம் கூறிக் கொள்ள விரும்பாத அவ்வாடவரின் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதோடு, தமது மனைவி-பிள்ளையைக் காணாத ஏக்கம் தமக்குத் தாங்க முடியவில்லை எனக் கூறி வந்த அவ்வாடவர், இன்னும் 10 நாட்களில் எப்படியாவது ஜோகூர் பாரு திரும்பி விடுவேன் என்றும் தெரிவித்து வந்திருக்கின்றார்.

ஆனால் திடீரென அவர் இப்படியொரு தற்கொலை முடிவை எடுத்தது எங்களுக்கே அதிர்ச்சியாகவும் மிகுந்த வேதனையாகவும் இருப்பதாக அவ்வாடவரின் நண்பர் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக மலேசிய-சிங்கப்பூர் எல்லைப் பகுதி மூடப்பட்டதால், இத்தகைய தற்கொலை சம்பங்கள் அதிகரித்திருப்பதாக சிங்கப்பூரிலுள்ள மலேசிய தொழிலாளர்களுக்கான சிறப்புப் பணிக்குழுவின் தலைவர் எஸ்.தயாளன் தெரிவித்தார்.

இத்தற்கொலைச் சம்பவம் பற்றி முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் தயாளன் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!