Latestமலேசியா

மலேசிய இந்திய சமுகத்திற்கு புதிய வாய்ப்புக்களை பொங்கல் கொண்டு வரட்டும்;  ம.இ.கா தேசிய தலைவர் – டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் வாழ்த்து

கோலாலம்பூர், ஜன 13- பிறந்திருக்கும் புத்தாண்டை நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் எதிர்கொள்ள நாம் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், நமது பாரம்பரிய திருநாள்- உழைப்பாளர்களை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் பெருமைக்குரிய நன்னாள் பொங்கல் மலர்கின்றது.

இந்த ஆண்டு மலர்கின்ற பொங்கல் நமது மலேசிய இந்தியர்களுக்கு வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி, மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துக் கொண்டார்.
கடந்த ஆண்டில் கோவிட் தொற்றால் பெரும் பாதிப்புக்குள்ளானது மக்களின் பொருளாதார வாழ்வாதாரமும், மாணவர்களின் கல்வியும்தான்.

எனவே, இந்த ஆண்டில் நமது மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அதன் மூலம், விடுபட்டுப் போன, இழந்த கல்வியை மாணவர்கள் மீண்டும் பெற்று, இந்த ஆண்டு அவர்களுக்கான பள்ளிப் பாடங்களிலும், தேர்வுகளிலும் சிறந்த முறையில் வெற்றி பெற நாம் பாடுபடுவோம்.

அதே வேளையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். எனவே, இந்திய சமூகம் சொந்தத் தொழில்களிலும், இணையம் வழியான தொழில்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருமானத்தை உயர்த்திக் கொள்வதற்கு முன்வர வேண்டும். கிராமப் புறங்களிலும், தோட்டப் புறங்களிலும் இருப்பவர்கள் விவசாயம் சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டு, தங்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் . கோவிட் -19 தொற்றை எதிர்கொள்ள அரசாங்கம் அதற்கான தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு இலவசமாகவே போடவிருக்கிறது என்பது நமக்கெல்லாம் மேலும் கூடுதல் உற்சாகத்தைத் தொடர்ந்திருக்கிறது. நாளடைவில் இந்தத் தொற்றின் தாக்கம் குறையும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால், நாம் இந்த முறை நமது பாரம்பரியத் திருவிழாக்களான பொங்கலையும் அதைத் தொடர்ந்து வரும் தைப்பூசத்தையும் வழக்கம்போல் கொண்டாட முடியாது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கோவிட்-19 தொற்றை எதிர்கொள்ள மற்றொரு நடவடிக்கையாக அவசரகாலமும் எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியை நமது இந்திய சமூகம், பொறுமையோடும், நன்கு சிந்தித்தும், திறந்த மனதோடும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மக்களின் நலன்களுக்காக, மேலும் நோயின் பாதிப்புகளால் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தோடும் அரசாங்கம் இந்த முடிவுகளை அமுல்படுத்தியிருக்கிறது.

எனவே, நமது பொங்கல் திருநாளை இந்த முறை நமது இல்லங்களுக்குள்ளேயே அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப கொண்டாடி, நமது உடல்நலத்தையும் மற்றவர்கள் உடல் நலத்தையும் பாதுகாப்போம் மேலவையின் முன்னாள் தலைவருமான விக்னேஸ்வரன் தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!