Latestமலேசியாவிளையாட்டு

மலேசிய பேட்மிண்டன் குழுவுக்கு 2021 நம்பிக்கை தரும் ஆண்டாக அமையும் – வொங் சுங் ஹான்

கோலாலம்பூர், ஜன 2-  இவ்வாண்டு மலேசிய பேட்மிண்டன் குழுவுக்கு பிறந்திருக்கும் புத்தாண்டு நம்பிக்கை அளிக்கும் ஆண்டாக அமையும் என தேசிய பேட்மிண்டன் குழுவின் பயிற்சிக் குழுத்தலைவர் வொங் சுங் ஹான் (Wong Choong Han) கூறினார். ஜப்பானில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டி, உலக சாம்பியன்ஷீப், டென்மார்க்கில் நடைபெறவிருக்கும் தாமஸ் மற்றும் உபர் கிண்ண பேட்மின்டன் போட்டி மற்றும் சுடிர்மான் கிண்ண போட்டிகளில் மலேசிய குழுவினர் களம் இறங்கவிருக்கின்றனர்.

மலேசிய பேட்மிட்டன் குழுவினர் கடந்த ஆண்டு முக்கியமான போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. கோவிட் பெரும் தொற்றினால் பல போட்டிகளை அனைத்துலக பேட்மிண்டன் சம்மேளனம் ரத்து செய்ததே இதற்கான காரணம் என வொங் சுங் ஹான் சுட்டிக்காட்டினார்.

அனைத்துலக போட்டிகளில் விளையாடாவிட்டாலும் நமது பேட்மிண்டன் விளையாட்டாளர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தீவிர பயிற்சியில் மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த ஆண்டு அவர்கள் கலந்து கொள்ளவிருக்கும் அனைத்துலக போட்டிகளில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தயார்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்த பயிற்சிகள் அமைந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆண்டு அனைத்துலக பேட்மிண்டன் போட்டிகளில் சிறந்த வெற்றியை பதிவு செய்வதற்கு வலுவான ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டக்காரர்களை நாம் தயார்படுத்த வேண்டியுள்ளது. இந்த இலக்கை அடிப்படையாகக் கொண்டே பயிற்சித் திட்டங்கள் வரையப்பட்டிருப்பதாக வொங் சுங் ஹான் கூறினார்.
உலகின் முன்னணி பேட்மிண்டன் வீரராக திகழ்ந்த டத்தோ லீ சொங் வெய் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அந்த வெற்றிடத்தை நிரம்ப வேண்டிய சிறந்த ஒற்றையர் விளையாட்டாளர்களை நாம் தயார்படுத்த வேண்டியுள்ளது. குறைந்தது மூன்று ஒற்றையர் ஆட்டக்காரர்களையும் இரண்டு இரட்டையர் ஜோடிகளையும் தயார் செய்ய வேண்டிய கடப்பாட்டில் இப்போது இருக்கிறோம் என வொங் சுங் ஹான் கூறினார்.

இப்போதைக்கு நம்பிக்கைக்குரிய ஒற்றையர் விளையாட்டாளராக லீ ஷீ ஜியா (Lee Zii Jia) திகழ்கிறார். உலக தர வரிசையில் அவர் தற்போது 9ஆவது இடத்தில் இருக்கிறார். அதே போன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் கடந்த சி போட்டியில் தங்கம் வென்ற கிசோனா திகழ்கிறார்.  மகளிர் இரட்டையர் பிரிவில் டீனாவும் இப்போது தேசிய குழுவில் இடம்பெற்றிருக்கிறார். இவர்களுடன் மேலும் சிறந்த விளையாட்டாளர்களை தயார்படுத்த வேண்டியுள்ளது.  அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டி உட்பட அனைத்துலக பேட்மிண்டன் போட்டிகளில் மலேசிய பேட்மிண்டன் விளையாட்டாளர்கள் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்த முடியும் என வொங் சுங் ஹான் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!