
ஜோர்ஜ் டவுன், செப் 17 – பினாங்கு, ஆயேர் ஈத்தாம் (Ayer Itam)மிலுள்ள கொடி மலையில் ஏறிக் கொண்டிருந்த 51 வயது மலையேறி ஒருவர், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கொடி மலையில் ஏறிக் கொண்டிருந்த மற்ற மலையேறிகள், ஊய் ஹோக் எங் (Ooi Hock Eng) என அடையாளம் காணப்பட்டுள்ள அவ்வாடவர், கீழே மயங்கி விழுந்து கிடந்ததைக் கண்டு பினாங்கு தீயணைப்பு மீட்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் தீயணைப்பு வீரர்களும் மருத்துவக் குழுவினரும் வந்து பரிசோதித்துப் பார்த்து, அவ்வாடவர் இறந்து விட்டதை உறுதிப் படுத்தினர். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டுள்ளது.