Latestஉலகம்

மாடுகளுக்கான மேய்ச்சல் நிலத்தில் சிங்களவர்கள் ஆக்கிரமிப்பு வேதனையில் மட்டக்களப்பு தமிழர்கள்

கொழும்பு, நவ 21 – மட்டக்களப்பு எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவனையில் உள்ள மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களை அம்பாறை பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த சிங்களவர்கள் சிலர் அத்துமீறி ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் மாட்டுப் பண்ணை வைத்திருப்போர் மற்றும் கால்நடை வளர்ப்பதை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் மட்டக் களப்பு தமிழர்கள் பெரும் வேதனைக்கும் அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

சுமார் 1,500 குடும்பங்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யும் சுமார் இரண்டு இலட்சம் மாடுகளை மேய்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேய்ச்சல் நிலத்தில் தற்போது சிங்களவர்கள் சிலர் ஆக்கிரமித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக மாட்டுப் பண்ணையாளர்கள் கூறுகின்றனர். இங்குள்ளவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

மேய்ச்சலுக்கு சென்றுவரும் மாடுகள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்தி வருவதுடன் பல மாடுகளை சுட்டும் படுகொலை செய்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாக அந்த பகுதியில் உள்ள தமிழர்களின் மாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருவதுடன் தடை செய்யப்பட்ட யானை வெடிகளை வீசி மாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக மாட்டுப் பண்ணையாளர்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர்.

இதனால் சில மாடுகள் உயிரிழந்துள்ளதுடன் பண்ணையாளர்கள் சிலர் அச்சம் காரணமாக தங்களது மாடுகளுடன் வேறு இடங்களை தேடி இடம் பெயர்ந்து வருகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமான அளவு வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் மாடு வளர்ப்பு தொழிலில் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற ஒரே காரணத்திற்காக தமிழர்களின் மாவட்டத்தை ஆக்கிரமிப்புச் செய்யும் நோக்குடன் சிங்கள குடியேற்றம் ஒன்றை உருவாக்குவதற்காகவே ராஜபக்ச அரசாங்கம் அந்த பகுதியில் உள்ள பண்ணையாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இரா. சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரம் குறித்து போலீசார் புகார் செய்தும் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று மாடு வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!