Latestமலேசியா

மாநிலங்களைக் கடக்க அனுமதி கோரும் விண்ணப்பங்களில் பல விநோதமான காரணங்கள், போலீசார் திகைப்பு!

குவாந்தான், அக் 20 – நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகியவற்றுக்குச் செல்ல அனுமதி கோரி, குவாந்தானில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் போலீஸ் பெற்றுள்ளது.

குவாந்தானில் வசிப்பவர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கும் அவ்விண்ணப்பங்களில் 830 விண்ணப்பங்களுக்குப் போலீசார் அனுமதி வழங்கியுள்ள நிலையில் ஏனைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் நூர் யுசோஃப் அலி (Mohamad Noor Yusof Ali) தெரிவித்தார்.

தாம் வார இறுதி நாள் கணவர், CMCO பகுதியில் இருக்கும் தனது குடும்பத்தைக் காணச் செல்ல வேண்டும் எனக் கூறி வந்த விண்ணப்பமும் அதில் அடங்கும்.

வலுவான காரணங்கள் முன் வைக்கப்படாததால், ஏறக்குறைய 300ல் இருந்து 350 விண்ணப்பங்கள் வரை நிராகரிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் பட்சத்தில், போலீசார் கருணையே இல்லாமல் நடந்து கொள்வதாக, தங்கள் மீது குறைகள் கூறப்படுவது வருத்தமளிப்பதாக ஏசிபி முகமட் நூர் குறிப்பிட்டார்.

CMCO பகுதிக்குள் நுழைய அனுமதிக்காததற்குத் தங்களுக்குப் பல காரணங்கள் உண்டு. அப்பகுதிகளில் கோவிட்-19 நோய்த் தொற்று மோசமாக இருப்பதால்தான், இந்த நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே கடந்த ஆறு நாட்களுக்கு முன்பிருந்து தனது மூன்று போலீஸ்காரர்கள் தத்தம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக ஏசிபி முகமட் நூர் சொன்னார்.

அவர்களில் இரு அதிகாரிகள் கோலாலம்பூரில் பயிற்சிக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் பயிற்சியை நடத்திய ஒருவருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

அதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மற்றொருவர் பணிக்காக சபா சென்று திரும்பிய பின்னர், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக ஏசிபி முகமட் நூர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!