
ஈப்போ, பிப் 23- மாற்றுத் திறனாளி ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் உணவகத்தில் மோதியது. இந்த சம்பவத்தில் உணவகத்திற்கு வெளியே சமைத்துக்கொண்டிருந்த ஆடவர் ஒருவர் மாண்டார். கம்பார் ஜாலான் பத்து சினாரில் இன்று காலையில் நிகழ்ந்த அந்த விபத்தில் 59 வயதுடைய சமையல்காரர் வோங் குவாய் யுங் மரணம் அடைந்தார். 50 வயதுடைய செக் லோவ் சீ என்ற சமையல் உதவியாளர் காயம் அடைந்தார்.
உணவு வாங்குவதற்காக 54 வயதுடைய மாற்றுத் திறனாளி உணவகத்திற்கு முன் காரை நிறுத்த முயன்றுள்ளார். அவர் தவறுதலாக எக்ஸிலேட்டரை மிதித்துவிட்டதால் அந்த கார் உணவகத்தின் முன்புறம் இருந்த அங்காடிக் கடையில் சமைத்துக்கொண்டிருந்த இருவர் மீது மோதியது என கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் ஹஸ்ரோன் நஸ்ரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
தலையில் கடுமையாக காயம் அடைந்த சமையல்காரர் வோங் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார். அவரது உதவியாளர் செக் லோவ் சீ தோள்பட்டை மற்றும் கால்களில் காயத்திற்கு உள்ளானார். இந்த சம்பவம் நடைபெற்றபோது அந்த உணவகத்தில் சில வாடிக்கையாளர்கள் உணவு உட்கொண்டிருந்தனர்.