Latestமலேசியா

வெளிநடப்பு செய்து மாமன்னரை அவமதிப்பதா? எதிர்கட்சியினர் மீது பிரதமர் காட்டம்

கோலாலம்பூர், பிப்ரவரி,27 – மக்களவையில் இன்று எதிர்கட்சியினர் நடந்து கொண்ட விதம் மாமன்னரை சிறுமைப்படுத்தும் செயல் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடியிருக்கிறார்.

அரச உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் போது வெளிநடப்பு செய்ததன் மூலம் மாமன்னரை அவர்கள் மதிக்கவில்லை என்பது புலப்படுவதாக அவர் சொன்னார்.

இன்றையப் பிரச்சனைகளுக்குக் காரணமாகக் கூறப்பட்ட தமதுரையையும் டத்தோ ஸ்ரீ அன்வார் தற்காத்துப் பேசினார்.

வாழ்த்துத் தெரிவித்து தாம் ஆற்றிய அரச விசுவாச உரை, மக்களவையின் விதிகளுக்கு எதிரானது என எதிர்கட்சியினர் கூறுவதை அன்வார் திட்டவட்டமாக மறுத்தார்.

தமது அவ்வுரைக்கும், தற்போது நடைபெற்று வரும் அரச உரைக்கும் நன்றித் தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கும் தொடர்பில்லை என பிரதமர் கூறினார்.

புதிய மாமன்னருக்கு வாழ்த்துத் தெரிவித்து, முந்தைய மாமன்னருக்கு நன்றித் தெரிவித்தது ஒரு குற்றமா என கேள்வி எழுப்பிய அன்வார், அந்த நேரத்தில் வெளிநடப்பு செய்து எதிர்கட்சியினர் அரச முறையையே அவமதித்து விட்டதாகக் குறைப்பட்டுக் கொண்டார்.

பார்க்கப் போனால் தாம் காலையிலேயே மக்களவைக்கு வந்து அந்த வாழ்த்துரையை ஆற்றியிருக்க வேண்டும்; ஆனால் மலேசியா வந்துள்ள கம்போடிய பிரதமருடன் புத்ராஜெயாவில் முக்கிய அலுவல் இருந்த காரணத்தினால் மதியம் வர வேண்டியதாயிற்று என்றார் அவர்.

அதை ஒரு பிரச்னையாக்கி, அவை விதி மீறல் எனக் குற்றம் சாட்டி வெளிநடப்பு செய்வது எந்த வகையில் நியாயம் என அன்வார் கேட்டார்.

சம்பவத்தின் போது, பிரதமர் அவை விதிகளை மீறியதாகக் கூறி எதிர்கட்சியினர் பிரச்சனைச் செய்ய, அவையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

கடைசியில் சபாநாயகர் பொறுமையிழந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த பெண்டாங் நாடாளுமன்ற உறுப்பினரை அவையில் இருந்து வெளியேற்றி, 4 நாட்களுக்கு இடைநீக்கமும் செய்தார்.

எனினும், பின்னர் அந்த MP தாம் கூறிய வார்த்தைகளை மீட்டுக் கொண்டு, மன்னிப்புக் கோரியதால், சபாநாயகர் அந்த இடைநீக்க உத்தரவை ரத்துச் செய்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!