Latestமலேசியா

விலையோ மலிவு, தரமோ குறைவு! முகக் கவசங்களை வாங்கும் போது கவனம்!

சுங்கை பெசார், செப் 16 – விலை மிகக் குறைவாக அதாவது ஒன்று, வெறும் 50 சென்னுக்கு விற்கப்படும் முகக் கவசங்கள், தரமற்றவையாக இருப்பதை, உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு கண்டறிந்துள்ளது.

எனவே விலை குறைவாக இருக்கின்றதே என நினைத்து, தரமற்ற முகக் கவசங்களை வாங்கி அணிய வேண்டாம் என அதன் துணை அமைச்சர் டத்தோ ரோசோல் வாஹிட் (Datuk Rosol Wahid) ஆலோசனை கூறியிருக்கின்றார்.

அத்தகைய முகக் கவசங்களை அணிவதால் எந்த பயனும் இல்லை, மாறாக ஆபத்து தான் அதிகம் என டத்தோ ரோசோல் குறிப்பிட்டார்.

வெறும் 50 சென்னுக்கு விற்கப்பட்டாலும் அது மூன்றடுக்குக் கொண்ட முகக் கவசம் என அதன் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அத்தகைய மலிவான முகக் கவசங்களைத் தயாரிக்க, நிச்சயம் தரமற்ற பொருட்கள் தான் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என துணை அமைச்சர் வலியுறுத்தினார்.

தூசு படிந்த அம்முகக் கவசங்களை அணிவதால் ஆரோக்கியத்துக்கும் கேடு ஏற்படும் என டத்தோ ரோசோல் கூறினார். 50 சென்னுக்கு விற்கப்படும் முகக் கவசங்களின் தரத்தை உறுதிச் செய்ய, அவை இரசாயனத் துறையின் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

ஒரு முகக் கவசத்தின் விலை ஒரு ரிங்கிட் என கடந்த ஆகஸ்ட் மாதம், அரசாங்கம் உச்சவரம்பு விலையை நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!