
கிள்ளான்,ஜன 25 –
89 வயதாகும் முனியம்மா ராஜலிங்கம் தனது வாழ்க்கையில் அதிகம் கஷ்டங்களைத் தான் அனுபவித்திருக்கின்றார்.
16 வயதில் திருமணம் செய்துக் கொண்ட இவர், 31 வயதில் கணவரை இழந்தார்.
மூன்று பிள்ளைகளுடன், கிடைத்த வேலைகளைச் செய்து வந்தார்.
40 ஆண்டுகளுக்கு முன்பு, இவரது மூத்த மகனும் அவரது மனைவியும் விபத்தில் உயிரிழக்க, இரு பேரப்பிள்ளைகளை கவனித்துக் கொள்ள வேண்டிய நிலை முனியம்மாவிற்கு ஏற்பட்டது.
கடைசியாக இப்போது உடன் யாருமின்றி தனியாக இருக்கின்றார் முனியம்மா.
இவர் தற்போது பெட்டாலிங் ஜெயாவிலுள்ள டேசா மெந்தாரி (Desa Mentari ) அடுக்குமாடி வீட்டில் வசித்து வருகின்றார்.
வேலைத்தேடிச் சென்ற அவரது மூத்த பேரன் ஈராண்டுகள் ஆகியும் வீடு திரும்பவில்லை.
கடந்தாண்டு மார்ச்சில், MCO நடமாட்டக் கட்டுப்பாட்டினால் வேலையிழந்த அவரது இரண்டாவது பேரன் , வன்முறையாக மாறியதாகவும் , போலீசாரால் பிடித்துச் செல்லப்பட்டு தற்போது மனநல மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக நம்பப்படுகிறது.
வருவாய்-க்கான எந்த ஆதாரமும் இன்றி இருக்கும் முனியம்மா, கடந்த ஒன்பது மாதங்களாக 650 ரிங்கிட்டுக்கான வீட்டு வாடகையை செலுத்த முடியாமல் உள்ளார்.
அண்டை வீட்டாரான ஜெயமணி, இவருக்கு உணவளித்து உதவி வருகின்றார்.
தனது பேரப்பிள்ளைகள் திரும்ப வரக் கூடுமென பிடிவாதமாக இருப்பதால், முனியம்மா முதியோர் இல்லத்திற்கு செல்ல மறுப்பதாகவும் அவர் கூறினார்.
பொது மக்கள் முனியம்மாவின் ஓராண்டுக்கான வீட்டு வாடகைப் பணத்தை கொடுத்துதவுமாறு,
சமூக மேம்பாட்டு உதவிகளைச் செய்து வரும் அரசாங்க சார்பற்ற அமைப்பின் இயக்குனர் ஃபிரோசா புர்ஹான் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
முனியம்மாவிற்கு உதவி செய்யவிரும்புபவர்கள் cdii.community@gmail.com. எனும் மின்னஞ்சலின் வாயிலாக, சம்பந்தப்பட்ட அரசாங்க சார்பற்ற அமைப்பைத் தொடர்பு கொள்ளலாம்.