Latestஇந்தியா

ஹைதராபாத்தில் வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்காக ரயிலை இயக்கிய மெட்ரோ நிர்வாகம்!

ஐதராபாத், அக் 18 – இந்தியா, ஹைதராபாத் (Hyderabad)தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் கொண்டு சேர்க்க, அவர் ஒருவருக்காக மட்டும் சிறப்பு ரயிலை இயக்கிய ஹைதராபாத் மெட்ரோ (Metro) ரயில் நிர்வாகத்துக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஹைதராபாத்தில் அண்மையில் கனத்த மழை பெய்ததால் நகரமே வெள்ளக்காடாக மாறியதில் தரை போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது.

அப்போது ரயிலில் மருத்துவமனை சென்று விடலாம் என்றெண்ணி, விக்டோரியா மெமோரியல் (Victoria Memorial) ரயில் நிலையம் சென்றார் அந்த கர்ப்பிணிப் பெண்.

ஆனால் அப்பெண் ரயில் நிலையம் வந்தடையும் போது இரவு மணி பத்தாகி விட்டது. வழக்கமாக இரவு 9 மணியோடு மெட்ரோ ரயில் சேவை முடிவடைந்து விடும்.

வலி தாங்க முடியாமல், அங்கிருந்த ரயில் நிலைய ஊழியர்களிடம் தம்மை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்து விடும்படி அப்பெண் கேட்டிருக்கின்றார்.

அப்பெண்ணின் நிலை கண்டு, உயர் அதிகாரிகளின் அனுமதியோடு மெட்ரோ ரயில் நிலைய நிர்வாகம், அப்பெண் ஒருவருக்காக மட்டும் ரயிலை இயக்கி, பத்திரமாக அப்பெண்ணை மருத்துவமனை கொண்டு சென்று சேர்த்தது.

மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இச்செயலால் நெகிழ்ந்து போன மக்கள், சமூக வலைத்தளங்கள் வாயிலாக பாராட்டு மழையைப் பொழிந்து வருகின்றனர்.

மனிதம் இன்னும் சாகவில்லை என அவர்கள் தங்களது வலைத்தள பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!