Latestஉலகம்மலேசியாவிளையாட்டு

2020 விளையாட்டு துறைக்கு பின்னடைவு !

கோலாலம்பூர், டிச 29- கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய  கோவிட் -19 தொற்று உலகளாவிய நிலையில் பரவியதால்  விளையாட்டுத்துறைக்கு இந்த ஆண்டு பெரிய பின்னடைவு ஏற்பட்டது என்றுதான் கூறவேண்டும்.  2ஆவது உலகப் போருக்குப் பின் முதல் முறையாக அனைத்துலக விளையாட்டுப் போட்டி கோவிட் தொற்றினால் ஒத்திவைக்கப்பட்டன.  பொதுவாக மலேசியா உட்பட உலகின்  பல நாடுகளைச் சேர்ந்த  விளையாட்டாளர்கள்  இந்த ஆண்டு ஜூலை மாதம்  தோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்கு திட்டமிட்டிருந்தனர்.  போட்டியை ஏற்று நடத்தவிருந்த ஜப்பானும் பெரிய அளவில் கோவிட் தொற்றுக்கு உள்ளானதால்   அப்போட்டி ஒத்திவைக்கப்பட வேண்டும் என அமெரிக்கா , பிரிட்டிஷ் ,கனடா,  ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் கொடுத்த அழுத்தத்தினால் ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.  இதன் காரணத்தினால் ஒலிம்பிக் போட்டிக்கான பல்வேறு தகுதிச் சுற்று போட்டிகளும் ரத்துச் செய்யப்பட்டன.  2021 ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்படும் என அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் போட்டியும்  ஒத்திவைக்கப்பட்டன. ஆசியான் பாரா விளையாட்டுப் போட்டியும் ரத்துச் செய்யப்பட்டது. இந்த ஆண்டு  நடைபெறவிருந்த  மகளிர்  உலக சாம்பின்ஷீப்  ஹாக்கிப் போட்டியும்   ஒத்தி வைக்கப்பட்டது.  அதே போன்று  மலேசியாவில் நடைபெறவிருந்த  சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கிப் போட்டி உட்பட பல ஹாக்கிப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதனிடையே, தேசிய ஹாக்கி அணியின் முன்னாள் விளையாட்டாளரான ஏ. கண்ணகி Young Tigress குழுவின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு, நீண்ட காலம் மலேசியா ஹாக்கி குழுவின் கோல் கீப்பராக இருந்துவந்த எஸ். குமார் அனைத்துலக ஹாக்கி போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, பயிற்சியாளராக நியமிக்கபடுவாரென மலேசிய ஹாக்கி சம்மேளனம் அறிவித்தது.

இவ்வாண்டு திட்டமிடப்பட்டிருந்த தாமஸ், உபர் கிண்ண பேட்மிண்டன் போட்டிகள் உட்பட  முக்கியமான அனைத்து பேட்மிண்டன் போட்டிகளையும் அனைத்துலக பேட்மிண்டன் சம்மேளனம் ரத்துச் செய்தது.  தாமஸ் மற்றும் உபர் கிண்ண பேட்மிண்டன் போட்டிக்கு  மலேசிய குழுவினர் தகுதி பெற்றுள்ளனர். மகளிருக்கான உபர் கிண்ண பேட்மிண்டன் போட்டியில் இம்முறை மலேசிய குழுவில் ஒற்றையர் பிரிவில் கிஷோனாவும் இரட்டையர் பிரிவில் தீனாவும் இடம்பெற்றுள்ளனர். சுவிஸ் பொது விருது,  இந்திய பொது விருது, மலேசிய பொது விருது, சிங்கப்பூர் பொது விருது ஆகிய பேட்மின்டன் போட்டிகளும்  அடுத்த ஆண்டு  ஏப்ரல் 12 ஆம் தேதி வரை  ஒத்திவைக்கப்பட்டன.

கோவிட் தொற்றினால்  அடுத்த ஆண்டு  நடைபெறவிருந்த  17  வயதுக்கு கீழ்ப்பட்ட மற்றும்  20 வயதுக்கு கீழ்ப்பட்ட உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள்  ரத்து செய்யப்படுவதாக அனைத்துலக காற்பந்து சம்மேளனம்  வியாழக்கிழமை  அறிவித்தது.  இந்த இரண்டு போட்டிகளிலும் கலந்தகொள்வதற்கு  திட்டமிட்டிருந்த மலேசியாவுக்கு இந்த முடிவு  பெரும் ஏமாற்றமாகும். அந்த இரண்டு போட்டிகளும் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுத்தான் நடைபெறும்.

உலகின் பிரபலமான காற்பந்து நட்சத்திரமான அர்ஜெண்டினாவின் டியாகோ மரடோனா  நவம்பர் 25 ஆம் தேதி மாரடைப்பினால் காலமானார். அவரது மரணச் செய்தி உலகம் முழுவதிலும் உள்ள காற்பந்து ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 1986 ஆம் ஆண்டு  மெக்சிகோ உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் தமது திறமையான ஆட்டத்தினால் அர்ஜெண்டினாவுக்கு வெற்றிக் கனியை பெற்றுத்தந்த அற்புதமான ஆட்டக்காரர்  என்று  பெருமையை மரடோனோ ஏற்படுத்தினார். வறுமையான ஒரு குடும்பத்தில் பிறந்து காற்பந்து விளையாட்டின் மூலம் சாதனையை ஏற்படுத்திய அவரது திறமையை எதிரணியின் ஆட்டக்காரர்களும்  இன்றுவரை மதிக்கின்றனர்.  அர்ஜெண்டினாவின்  தேசிய குழுவுக்கு மட்டுமின்றி,  பார்சிலோனா , நாபோலி போன்ற கிளப்புகளிலும் விளையாடி தமது முத்திரையை பதித்தவராக  மரடோனா விளங்கினார்.

மரடோனாவைத் தவிர்த்து இத்தாலியின்  பிரபல காற்பந்து விளையாட்டாளரும்  1982 ஆம் ஆண்டு ஸ்பெய்னில் நடைபெற்ற உலகக் கிண்ண  காற்பந்து போட்டியில்  இத்தாலி குழுவுக்கு  வெற்றியை தேடித்தந்தவருமான பவ்லோ ரோசியும்  காலமானார்.  இந்த இரண்டு காற்பந்து விளையாட்டாளர்கள் மரணம் அடைந்தது உலகம் முழுவதிலும் உள்ள காற்பந்து ரசிகர்களிடையே பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் பிரபல கூடைபந்து வீரரான கோபி  பிரையன்ட் இவ்வாண்டு ஜனவரி 26 ஆம் தேதி கலிபோர்னியாவில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார்.  லா லேகர் கூடைப்பந்து குழுவின் ஆட்டக்காரருமான கோபி  பிரையன்வுடன் அவரது எட்டு வயது மகளும் அந்த விபத்தில் உயிரிழந்தார்

இந்த ஆண்டு  மலேசிய விளையாட்டாளர்கள் அனைத்துலக விளையாட்டுப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை கொண்டிருக்காவிட்டாலும் நாட்டின் இளம் பனிச் சறுக்கு வீராங்கனையான  8 வயது  ஸ்ரீ அபிராமி சந்திரன்  தொடர்ந்து முத்திரையைப் பதித்து வருகிறார். குளிர்கால போட்டிக்கு தயாராகும் பொருட்டு தற்போது வெளிநாட்டில் பயிற்சி  பெற்று வரும்  ஸ்ரீ அபிராமி  இவ்வாண்டு தொடக்கத்தில் அபு டாபியில் நடைபெற்ற அனைத்துலக  பனிச் சறுக்கு போட்டியில் நான்கு தங்கப் பதக்கங்களையும் ஒரு  வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!