
புத்ரா ஜெயா, பிப் 23- நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,468 பேர் கோவிட் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகினர். அதே வேளையில் 14 பேர் இந்த தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நோயிலிருந்து 4,055 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன்வழி இதுவரை கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 288,229 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் இன்னமும் 30,475 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 196 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு 92 பேருக்க சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கோவிட் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 256,678 பேர் முழுமையாக குணம் அடைந்துள்ளனர் என சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். நாட்டில் கோவிட் தொற்று பரவியது முதல் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,076 ஆக அதிகரித்துள்ளது.
சிலாங்கூரில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சிலாங்கூரில் 932 பேர் இந்த தொற்றுக்கு உள்ளாகினர். அதற்கு அடுத்த நிலையில் ஜோகூரில் 428 பேரும், பேராவில் 308 பேரும பினாங்கில் 155 பேரும், கோலாலம்பூரில் 155 பேரும், நெகிரி செம்பிலானில் 100 பேரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் சபாவில் 94 பேரும் , சரவாக்கில் 133 பேரும் , கெடாவில் 15 பேரும், மலாக்காவில் 22 பேரும் , கிளந்தானில் 96 பேரும், திரங்கானுவில் 9 பேரும், பகாங்கில் 11 பேரும் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனிடையே நாட்டில் 13 புதிய தொற்று மையங்களும் இன்று கண்டறியப்பட்டன. இவற்றில் 11 தொற்று மையங்கள் வேலையிடங்கள் மூலம் பரவியிருப்பதும் தெரியவந்துள்ளது.