Latestசினிமாமலேசியா

ஆஸ்ட்ரோவில் புதிய உள்ளூர் தமிழ் திரில்லர் தொடர் – ‘குருதி மழை’

கோலாலம்பூர், நவ 27 – டிசம்பர் 1, இரவு 9 மணி முதல் அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வழியாக ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) முதல் ஒளிபரப்புக் காணவிருக்கும் ‘குருதி மழை’ எனும் புத்தம் புதிய திரில்லர் தொடரைக் கண்டுக் களிக்கலாம்.

உள்ளூர் இயக்குநர் இந்திரன் சண்முகம் கைவண்ணத்தில் மலர்ந்த இம்மர்ம தொடர் 22 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இத்தொடரில் சி. குமரேசன், திலீப் குமார் மற்றும் அம்மு திருஞானம் என பல உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர். ‘குருதி மழை’, மலாய் தொடர் ‘கேராக் ஹாஸ்’ (Gerak Khas), அன்டர்கவர் ராஸ்கல்ஸ் (2010), மைந்தன் (2014), மயங்காதே (2016), மலாய் திரில்லர் திரைப்படம் டுகூன் (2018) மற்றும் என்னவள் (2019) போன்ற புகழ் பெற்ற உள்ளூர் திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்த பிரபல உள்ளூர் நடிகர், இயக்குனர் மற்றும் எழுத்தாளரான சி.குமரேசன் நடித்த முதல் உள்ளூர் தமிழ் தொடராகும்.

மக்களின் பார்வைக்கு எட்டிய ஒரு கொலை வழக்கின் பொறுப்பைத் தன் கையில் எடுக்கும் காவல்துறை அதிகாரி இன்ஸ்பெக்டர் கதிர்வேல் (சி. குமரேசன்) பற்றியக் கதையை ‘குருதி மழை’ தொடர் சித்தறிக்கின்றது. வழக்கின் பொறுப்பை ஏற்ற முதல் நாளிலேயே ஒரு கொலை ஏற்படவே கொலைகாரனை விரைவில் கைதுச் செய்வதற்கானக் கூடுதல் அழுத்தத்திற்கு ஆளாகிறார், இன்ஸ்பெக்டர் கதிர்வேல். அவரது மனைவியின் கொலை நிலைமையை மேலும் மோசமடையச் செய்கிறது. அவர் தனது சக காவல்துறை அதிகாரி, சப்-இன்ஸ்பெக்டர் எழிலுடன் (திலீப் குமார்) வழக்கை விசாரிக்கையில் இம்மோசமானத் தொடர் கொலையாளி மழை நாட்களில் மட்டும் தனது இரையை வேட்டையாடுவதைக் கண்டறிகின்றனர். தொடர் கொலையாளியை இருவரும் வெற்றிகரமாகக் கைதுச் செய்வார்களா என்பதே இக்கதையின் முக்கிய அம்சமாகும்.

‘குருதி மழை’ தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு தொலைக்காட்சியில் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு களிக்கலாம் அல்லது எப்போதும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!