Latestமலேசியா

CMCO: முக்கியமான காரணங்களுக்காக மட்டும் மாநிலங்களைக் கடக்க விண்ணப்பியுங்கள், போலீஸ் அறிவுறுத்து!

கோலாலம்பூர், அக் 18 – மாநிலங்களைக் கடக்க விரும்பும் பொது மக்கள், தவிர்க்க முடியாத தேவையோ அவசியமோ இருந்தால் மட்டுமே அதற்கு அனுமதி கோரி போலீசிடம் விண்ணப்பம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முக்கியமில்லாத காரணங்களுக்காக, மாநிலங்களைக் கடக்க அனுமதி கோரி செய்யப்படும் விண்ணப்பங்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா என கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அரிஃபாய் தாராவே (Arifai Tarawe) தெரிவித்தார்.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வந்த கடந்த 14ஆம் தேதியில் இருந்து இந்த 4 நாட்களில் மாநிலங்களைக் கடக்க அனுமதி கோரி, 1,587 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அவற்றில் 1,555 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட வேளையில் ஏனையவை நிராகரிக்கப்பட்டதாக ஏசிபி அரிஃபாய் தெரிவித்தார்.

பெரும்பாலான விண்ணப்பங்கள், நோய்வாய்ப் பட்டிருக்கும் குடும்ப உறுப்பினரைக் காண்பதற்காகவும், மருத்துவக் காரணங்களுக்காகவும், இறப்பு, ஆபத்து அவசரத் தேவை போன்றவற்றுக்காகவும் செய்யப்பட்டிருந்தன. அத்தகைய விண்ணப்பங்களுக்குப் போலீஸ் அனுமதி வழங்கியது.

அதேசமயம், விடுமுறையைக் கழிக்கச் செல்ல வேண்டும், சுற்றுலா, திருமண விழா, பிள்ளையைக் கொண்டு போய் விட வேண்டும் போன்று முக்கியம் இல்லாத காரணங்களுக்காகச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக ஏசிபி அரிஃபாய் கூறினார்.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டிருக்கும் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய இடங்களிலிருந்து, முக்கியமானத் தேவைகளுக்காக வேறு மாநிலங்களுக்குச் செல்ல எண்ணும் பொது மக்கள், அதற்கான அனுமதி பாரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

பொது மக்கள் போலீஸ் நிலையங்களிலிருந்து அப்பாரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது PDRMமின் முகநூல் பக்கத்திலிருந்து அப்பாரங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகியவற்றில் இம்மாதம் 27ஆம் தேதி வரை, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!