
வாஷிங்டன், அக் 1 – மலேசியாவின் எஃப்ஜிவி ஹோல்டிங்ஸ் (FGV Holdings) நிறுவனத்திலிருந்து செம்பனை எண்ணெய் மற்றும் செம்பனை எண்ணெய் சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
உலகின் மிகப் பெரிய செம்பனை எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களில் இந்த FGV Holdings-சும் ஒன்றாகும்.
அதோடு, அமெரிக்காவுக்கு பெரிய அளவில் செம்பனை எண்ணெயை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது நாடு மலேசியா.
அப்படியிருக்க அந்நிறுவனத்தில் இருந்து கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் அனைத்து பொருட்களும், அமெரிக்காவுக்குள் நுழைய முடியாதபடி, துறைமுகங்களிலேயே தடுத்து நிறுத்தப்படும் என அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.
FGV நிறுவனம், கொத்தடிமைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தங்களுக்குத் தகவல் கிடைத்திருப்பதை அடுத்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அதோடு அந்நிறுவனம், தனது தொழிலாளர்களை அச்சுறுத்தி, உடல் ரீதியாகக் கொடுமைப்படுத்துவது, கடந்த ஓராண்டாக தாங்கள் மேற்கொண்ட விசாரணையின் வழி தெரிய வந்திருப்பதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.
ஆனால் அக்குற்றச்சாட்டுக்களை மறுத்த FGV நிறுவனம் தொழிலாளர்களின் நலனைப் பேணுவதிலும், அடிப்படை மனித உரிமையை மதிப்பதிலும் தாங்கள் தொடர்ந்து கடப்பாட்டுடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.