Latestமலேசியா

இவ்வாண்டு தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை வீழ்ச்சி

கோலாலம்பூர், மார்ச் 15 – இவ்வாண்டு புதிய கல்வி தவணை தொடங்கியபோது நாடு முழுவதிலும் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 11, 677 ஆக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு தமிழ்ப் பள்ளிகளில் முதல் வகுப்பில் இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை 11,871 பேராக இருந்தது. மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இவ்வாண்டு 194 மாணவர்கள் குறைந்துள்ளனர்.

சிலாங்கூரில் உள்ள தமிப்பள்ளிகளில் கடந்த ஆண்டு 3,887 மாணவர்கள் முதல் வகுப்பில் இருந்தனர். இந்த ஆண்டு சிலாங்கூரில் உள்ள பள்ளிகளில் முதல் வகுப்பில் மொத்தம் 3,889 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இவ்வாண்டு சிலாங்கூர் மாநிலத்தில் இரண்டு மாணவர்கள் மட்டுமே அதிகரித்துள்ளனர். அதனை அடுத்து ஜோகூரில் இவ்வாண்டு 1,929 மாணவர்கள் இணைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜோகூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் 1913 மாணவர்கள் முதல் வகுப்பில் பயின்றனர். பேராவில் கடந்த ஆண்டு 1,724 மாணவர்கள் முதல் வகுப்பில் பயின்றனர். இவ்வாண்டு இந்த எண்ணிக்கை 1,670 ஆக குறைந்துள்ளது.

இவ்வாண்டு பெர்லீசில் முதல் வகுப்பில் 4 மாணவர்களும் , கெடாவில் 948 மாணவர்களும், பினாங்கில் 834 மாணவர்களும், நெகிரி செம்பிலானில் 1,221 மாணவர்களும் ,மலாக்காவில் 339 மணவர்களும், பகாங்கில் 315 மாணவர்களும் கிளந்தானில் 6 மாணவர்களும் கூட்டரசு பிரதேசத்தில் 522 மாணவர்களும் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர்.

இந்திய சமூகத்தில் குறைந்துவரும் மக்கள் தொகை, பிறமொழிப் பள்ளிகளுக்கு பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அனுப்புவதில் இருக்கும் ஆர்வம், போக்குவரத்து வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் ஆண்டுதோறும் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!