Latestமலேசியா

MCO 2.0 : மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது   

கோலாலம்பூர், ஜன 25 – பொருளாதார துறைகளுக்கு குறிப்பிட்டத்  தளர்வுகளை வழங்கி இரண்டாவது முறையாக,  நாட்டில் MCO -நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்தியிருக்கும் முடிவு எளிதாக எடுக்கப்பட்ட ஒரு முடிவல்ல.

எனினும்,  மக்களின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும்  அதேவேளை ,  பொருளாதாரத்தையும் முடுக்கி விடும்  கட்டாய  நிலை ஏற்பட்டிருப்பதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்றால் மக்கள் உயிரிழக்கக் கூடாது ; அதே வேளை   பசியால் ஒருவரும் உயிரிழக்கக் கூடாது என்பதை உறுதிச் செய்யும் கடப்பாடும் அரசாங்கத்திற்கு உண்டு.
அதன் அடிப்படையிலே,  தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ், குறிப்பிட்டத் தளர்வுகள்  வழங்கப்பட்டிருப்பதாக , உள்நாட்டு ஊடகத்திற்கு வழங்கியிருந்த நேர்காணலில் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ், தளர்வுகள் அதிகம் வழங்கப்பட்டுள்ளதாக சில தரப்பபினர் அரசாங்கத்தின் முடிவு குறித்து கேள்வியெழுப்பியிருக்கின்றனர்.

MCO தொடர்ந்து நீடித்தால்,  நாடு திவாலாகக் கூடும். முதல் முறையாக கடந்தாண்டு மார்ச்சில் , மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டபோது, நாடு நாளொன்றுக்கு  240 கோடி ரிங்கிட் (RM2.4 billion)  இழப்பை எதிர்நோக்கியது. அதன் அடிப்படையிலே ,  இரண்டாவது முறையாக நாட்டில் மக்களின் நடமாட்டம் கட்டுத்தப்பட்டபோது, அரசாங்கம் சில தளர்வுகளை வழங்கியிருப்பதாக  அமைச்சர் விளக்கினார்.

அத்துடன் பெரிய முதலாளிகளை காப்பாற்றுவதற்காக, தயாரிப்புத் துறைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை சப்ரி யாக்கோப் மறுத்தார்.

தயாரிப்பு தொழிற்துறைகள் திறக்கப்படும்போது ,  அதை சார்ந்த சிறு நிறுவனங்களும் செயல்பட முடியும்;  தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து சம்பளம் வழங்கப்படுமென அவர் கூறினார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல்வேறு உதவித் திட்டங்களை அறிவித்தாலும்,  அரசாங்கத்தால்  தொடர்ந்து அந்த உதவிகளைச் செய்ய முடியாது.  நீண்ட கால அடிப்படையில் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துமென்றாரவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!