
கோலாலம்பூர், ஜன 22 – PCA எனப்படும் விரிவுபடுத்தப்பட்ட கால முறைப் பயண ஏற்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிங்கப்பூரில் வேலை செய்துவரும் மலேசியர்கள் குறுகிய கால விடுமுறையில் தயாகத்திற்கு திரும்ப முடியும். ம. இ. காவின் சிங்கப்பூர் தொழிலாளர் விவகாரப் பிரிவின் தலைவரான எஸ்,அருள்தாஸ் இதனைத் தெரிவித்தார்.
மலேசியாவில் ஆகக்கடைசியாக அமல்படுத்தப்பட்டுள்ள MCO எனப்படும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை குறித்து சிங்கப்பூரில் வேலை செய்துவரும் அதிகமான மலேசியர்களிடம் உதவி கேட்டு தொலைபேசி அழைப்பை பெற்றதாகவும் அருள்தாஸ் தெரிவித்தார். குடும்பத்தில் ஏற்பட்ட மரணம் போன்ற நெருக்கடி போன்ற பிரச்சனை ஏற்படும்போது உடனடியாக மலேசியா திரும்புவது குறித்து ஒரு வாரத்திற்கு சராசரி ஐந்து முதல் ஆறு அழைப்புக்களை தாம் பெற்று வருவதாகவும் அவர் விவரித்தார். மலேசியர்கள் தங்களது நிறுவனத்தின் மூலம் PCA திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
ஆனால் மலேசியா திரும்புவதற்கு முன் அவர்கள் 2,100 சிங்கப்பூர் டாலர் அல்லது 6,394 மலேசிய ரிங்கிட் செலுத்த வேண்டும் என அருள்தாஸ் தெரிவித்தார். சிங்கப்பூர் திரும்பிய பின் 14 நாட்கள் தனித்திருப்பதற்கான செலவை இந்த தொகை ஈடுகட்டும். ஒரு நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒருவர் வேலை செய்திருந்தால் அவர்களுக்கு மலேசியாவிலுள்ள சில முதலாளிகள் உதவுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தனித்திருப்பதற்காக கட்டணம் செலுத்துவதற்கு மலேசியர்களுக்கு இந்த நிறுவனங்கள் உதவும் என அவர் சொன்னார். PCA அனுமதியுடன் கோவிட் பரிசோதனையில் அவர்களுக்கு கோவிட் தொற்று இல்லையென்ற சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் என அருள்தாஸ் கூறினார்.