Latestமலேசியா

மோட்டார் சைக்கிளில் சென்றபோது வழியில் புலி கடந்து சென்றதை பார்த்த அதிர்ச்சியில் மாணவர்

கம்பார், டிச 17 – பினாங்கு கெப்பாலா பத்தாசிலிருந்து பேராக், கம்பார் கம்போங் மென்டோக் சாஹோமிலுள்ள தமது கிராமத்திற்கு நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த போது புலி ஒன்று சாலையைக் கடந்து சென்றதை நேரடியாக கண்டதால் தொழில்திறன் பயிற்சி மேற்கொண்டுவரும் மாணவர் ஒருவர் பெரும் அதிர்ச்சிக்கும் அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளார்.

புதரிலிருந்து வெளியே வந்த புலி தமக்கு முன் இரண்டு மீட்டர் தூரத்தில் சாலையைக் கடந்து சென்றதாக 21 வயது ஹஃபிசுடீன் அஸ்ரி எனும் அந்த மாணவர் தெரிவித்திருக்கிறார்.

அந்த நேரம் மழை தூறிக்கொண்டிருந்தது. தெரு விளக்குகளும் இல்லை. நீண்ட வால் ஒன்றுடன் அந்த புலியின் உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் புதரிலிருந்து வெளியேறிய அந்த புலி சர்வ சாதாரணமாக சாலையை கடந்து சென்றதாக ஹஃபிசுடீன் செய்தியாளர்களிடம் கூறினார்.

பினாங்கு கெப்பாலா பத்தாஸ்சில் படித்து வரும் தாம், தமது கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த பயங்கர அனுபவத்தை சந்தித்ததாக அம்மாணவர் தெரிவித்தார்.

புலியை கண்டவுடன் மின்னல் வேகத்தில் தமது மோட்டார் சைக்கிளை அருகேயுள்ள நண்பரின் வீட்டிற்கு ஓட்டிச் சென்றதாகவும் அங்குள்ள கிராமத் தலைவரிடம் இந்த விவகாரம் குறித்து தெரிவித்தவுடன் அவர் உடனடியாக வனவிலங்கு பூங்கா துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

புலி நடமாட்டம் குறித்த புகார் பெற்றதை பேரா வனவிலங்கு பூங்கா இயக்குனர் யூசுஃப் சாரிப் உறுதிப்படுத்தியதோடு புலியை பிடிப்பதற்காக பொறி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் அந்த புலி விரைவில் சிக்கும் என பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் அஸ்லான் ஹெல்மீ நம்பிக்கை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!