ஹைதராபாத், டிசம்பர்-15,’புஷ்பா-2′ படத்தின் சிறப்புக் காட்சியின் போது ஏற்பட்ட அசம்பாவிதம் எதிர்பாராத ஒன்று.
அதில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் அல்லு அர்ஜூன் கூறியுள்ளார்.
இந்த இக்கட்டானச் சூழ்நிலையில் அக்குடும்பத்துக்குத் தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்யத் தயாரென, ஒரு நாள் சிறைக் காவலிலிருந்து வெளியே ஜாமீனில் வந்த அல்லு அர்ஜூன் செய்தியாளர்களிடம் சொன்னார்.
திரையரங்கினுள் குடும்பத்தோடு நாங்கள் படம் பார்த்துகொண்டிருந்த போது வெளியில் நடந்த அசம்பாவிதம் அது.
அதற்கு நான் நேரடி பொறுப்பல்ல; என்றாலும் போலீசின் விசாணைக்கு ஒத்துழைப்பேன் என்றார் அவர்.
20 வருடங்களாக அதே திரையரங்கத்திற்கு வந்துபோகிறேன்; ஒருமுறை கூட இப்படி நடந்ததில்லை.
ஆனால் துரதிஷ்டவசமாக இம்முறை அப்படி நடந்து விட்டதாக அல்லு அர்ஜூன் சொன்னார்.
முன்னதாக ‘புஷ்பா-2’ சிறப்புக் காட்சியின் போது திரையரங்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது குடும்ப மாது உயிரிழந்தார்.
படுகாயமடைந்த அவரின் 9 வயது மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
அல்லு அர்ஜூன் அங்கு வரும் தகவல் போலீசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படாதது, அவரின் மெய்க்காவலர்கள் இரசிகர்களைப் பிடித்துத் தள்ளியது, திரையரங்க நிர்வாகம் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாதது ஆகியவைவே, அந்த உயிரிழப்புக்குக் காரணம் எனப் போலீஸ் குற்றம் சாட்டியது.
இதையடுத்து அல்லு அர்ஜூனுடன், திரையரங்க உரிமையாளர் மற்றும் மேலாளரும் கைது செய்யப்பட்டனர்.