குவாஹாத்தி, ஜனவரி-7 – இந்தியாவின் அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கத்தினுள் எதிர்பாராவிதமாக வெள்ள நீர் புகுந்ததால், ஏராளமான தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளனர்.
300 அடி ஆழத்தில் அவர்கள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.
பேரிடர் மீட்புக் குழுவினரால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இராணுவத்தை வரவழைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் இறைக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
சிக்கிக் கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை என்றாலும், பத்துக்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டிருக்கக் கூடுமென அதிகாரிகள் கூறினர்.
வடகிழக்கு இந்திய மாநிலங்களில் நிலக்கரி சுரங்க விபத்துகள் நடப்பது வழக்கமான ஒன்றாகும்.
ஆக மோசமாக, 2019-ல் மேகாலயா மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் 15 பேர் உயிரோடு புதையுண்டது குறிப்பிடத்தக்கது.