குவாஹாத்தி, ஜனவரி-8, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமின் தொலைதூர மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிய நிலக்கரி சுரங்கத்திலிருந்து, ஒரு சுரங்கத் தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
நிலத்தடியில் சிக்கிக் கொண்ட 9 பேரைத் தேடி மீட்கும் பணிகளின் இரண்டாவது நாளான இன்று அச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
91 மீட்டர் ஆழம் மற்றும் பல நிலத்தடி சுரங்கங்களைக் கொண்ட இந்த சட்டவிரோத சுரங்கத்தினுள், திங்கட்கிழமை காலை வெள்ள நீர் புகுந்தது.
வெள்ள நீர் மட்டம் நேற்று மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருந்ததால், இன்று காலை முக்குளிப்பாளர்கள் மீண்டும் சுரங்கத்திற்குள் நுழைந்து ஒரு உடலை மீட்டெடுத்ததாக, அசாம் மாநில முதலலமைச்சர் கூறினார்.
மீட்புப் பணிகளுக்கு உதவ, இராணுவ ஹெலிகாப்டர்களோடு, முக்குளிப்போர் மற்றும் பொறியியலாளர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு நடவடிக்கைகள் எவ்வளவு காலம் நீடிக்குமென்பதை இப்போதைக்கு சொல்ல முடியாதென தேசிய பேரிடர் நிவாரணப் படையின் தலைவர் சொன்னார்.
வடகிழக்கு இந்திய மாநிலங்களில் நிலக்கரி சுரங்க விபத்துகள் நடப்பது வழக்கமான ஒன்றாகும்.
ஆக மோசமாக, 2019-ல் மேகாலயா மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் 15 பேர் உயிரோடு புதையுண்டது குறிப்பிடத்தக்கது.