கோலாலம்பூர், மே 9 – தலைநகரில், மிகவும் அசுத்தமாக அருவறுக்கத்தக்க சூழலில் காணப்பட்ட உணகவம் ஒன்றை உடனடியாக மூட, DBKL – கோலாலம்பூர் மாநகர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம், பல்வேறு குற்றங்களுக்காக 69 அபராதப் பதிவுகளையும் வெளியிட்டுள்ளது.
லெப்பா பந்தாய் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள, மிட் வேலி மேகா மோல் பேரங்காடி, ஜாலான் ஊஜான் எமாஸ், செபூத்தே நாடாளுமன்ற தொகுதியிலுள்ள, ஜாலான் ஊஜான் ரஹ்மாட், செராசிலுள்ள, ஜாலான் மெட்ரோ புடு, புக்கிட் பிந்தாங்கிலுள்ள, மிட்சுய் ஷாப்பிங் பார்க் லாலாபோர்ட், செகாம்பூட்டிலுள்ள, புத்ரா மோல் ஆகிய பகுதிகளை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அச்சோதனையின் போது, மொத்தம் 88 வளாகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. எனினும், அதில் 69 வளாகங்கள் மட்டுமே செயல்பட்டதால், அங்கு மட்டும் சோதனையிடப்பட்டதாக DBKL ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
அதில், ஓரு வளாகத்திற்கு எதிராக 1983-ஆம் ஆண்டு உணவு சட்டத்தின் கீழ், உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதோடு, சுத்தத்தை பேணாதது, பணியாளர்கள் மற்றும் சுற்று சூழலை உட்படுத்திய விவகாரங்கள் தொடர்பில் 69 அபராதப் பதிவுகள் வெளியிடப்பட்டதையும், அந்த அறிக்கையின் வாயிலாக DBKL உறுதிப்படுத்தியுள்ளது.