
பகோத்தா, மே 18 – கொலம்பியாவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் இரண்டு வாரத்திற்கு முன் நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கிய 11 மாத குழந்தை உட்பட பூர்வ குடிகளைச் சேர்ந்த நான்கு சிறார்கள் உயிருடன் இருப்பதாக அந்நாட்டு அதிபர் Gustavo Petro தெரிவித்திருக்கிறார். நாட்டிற்கு இது மகிழ்ச்சியான செய்தி என அவர் வருணித்தார். ராணுவம் விடா முயற்சியாக மேற்கொண்ட தேடும் நடவடிக்கையில் அந்த சிறார்கள் கண்டுப் பிடிக்கப்பட்டதாக Petro தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதே வேளையில் அந்த சிறார்கள் மீட்கப்பட்டது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மே 1ஆம்தேதி அந்த சிறார்கள் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது. அவர்களை தேடும் நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மோப்ப நாய்களின் உதவியோடு ஈடுபட்டனர். அந்த விபத்தில் விமானி உட்பட அந்த சிறார்களின் தயாரும் இறந்தனர். 11 மாத குழந்தையை தவிர்த்து 13 வயது, 9 வயது மற்றும் 4 வயது சிறார்கள் விபத்து நடந்தது முதல் காட்டில் அலைந்து திரிந்துகொண்டிருந்தாக கூறப்படுகிறது. எனினும் அந்த காட்டுப் பகுதியில் அந்த சிறார்கள் எங்கு மீட்கப்பட்டனர் மற்றும் எப்படி அவர்கள் தனியாக இருந்தனர் என்ற விவரங்களை Petro வெளியிடவில்லை.