
கோலாலம்பூர், செப் 12 – அடுக்ககம் ஒன்றில் ஒரு தாயும் அவரது இரு பதின்மவயது பிள்ளைகளும் கடந்த வியாழக்கிழமை இறந்து கிடந்த சம்பவத்திற்கு எந்தவொரு குற்ற அம்சங்களும் இல்லையயென தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் Hussein Omar Khan தெரிவித்திருக்கிறார். கடன் வழங்கியோரின் பட்டியலில் தற்கொலை குறிப்பு ஒன்றும் எழுதப்பட்டிருந்ததாக அவர் கூறினார். சவ பரிசோதனை நடவடிக்கை முடிந்துவிட்ட போதிலும் மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென்றும் அவர் தெரிவித்தார். அதே வேளையில் அவர்களது உடலில் மருந்து அல்லது ரசாயனம் அம்சங்கள் இருப்பதை அறிந்துகொள்வதற்கு நச்சுயிரி பரிசோதனையின் முடிவுக்காக போலீஸ் இன்னமும் காத்திருப்பதாக ஹுசைன் ஒமார் கூறினார்.
போலீஸ் தங்களது விசாரணையை முடித்துக்கொள்வதற்கு முன் அந்த பெண்மணி வேலை செய்து வந்த நிறுவனதின் முதலாளி மற்றும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடமும் வாக்குமூலம் பெறப்படும் என ஹுசைன் ஒமார் தெரிவித்தார். 42 வயதுடைய பெண்ணும் அவரது 14 வயது மற்றும் 15 வயதுடைய மகளும் மகனும் அடுக்குமாடி வீட்டிலுள்ள அறை ஒன்றில் இறந்துகிடந்தனர். இதனை திடீர் மரணம் என போலீசார் வகைப்படுத்தினர்.