
கோலாலம்பூர், ஜன 29 – அதிகாரத்தில் நீடித்திருப்பதற்காக மற்றவர்களின் முதுகில் அம்னோ நீண்ட காலம் சவாரி செய்துகொண்டிருக்கக்கூடாது என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான துங்கு ரசாலி ஹம்சா தெரிவித்திருக்கிறார். 15ஆவது பொதுத் தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட மோசமான தோல்வியினால் அம்னோவில் உருமாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும் என குவா மூசாங் அம்னோ டிவிசன் தலைவருமான துங்கு ரசாலி கூறினார். வலுவான கட்சியாக அம்னோ எழுச்சிபெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அதிகாரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதாற்காக அல்லது செல்வாக்கிற்காக மற்ற தரப்புக்களை அம்னோ நம்பியிருக்கக்கூடாது. அதிகமான மலேசியர்களைக் கொண்ட கட்சியாகவும் அம்னோ திகழ்வதால் அக்கட்சி தனது தனித்துவத்தை இழந்துவிடக்கூடாது என்றும் துங்கு ரசாலி வலியுறுத்தினார்.