
வியன்னா, ஆகஸ்ட்டு 25 – ஆஸ்திரியாவில் அதிவேகமாக உருகி வரும் பனிப்பாறையிலிருந்து, 20 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், டைரோல் (Tyrol) மாநிலத்திலுள்ள, Schlatenkees பனிப்பாறையில் ஏறிய வழிகாட்டி ஒருவர், ஈராயிரத்து 900 மீட்டர் உயரத்தில் அந்த சடலத்தை கண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த சடலத்திற்கு அருகில், வங்கி அட்டை மற்றும் வாகனம் ஓட்டும் உரிமம் அடங்கிய பை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
ஹெலிகப்டர் வாயிலாக மீட்கப்பட்ட அந்த சடலம், மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரிய நாட்டவரான அவ்வாடவர், 2001-ஆம் ஆண்டு, 37 வயதாக இருக்கும் போது உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
உலகில் அதிவேகமாக உருகும் பனிப்பாறைகளில் ஒன்றாக, Schlatenkees பனிப்பாறை திகழ்கிறது.
அதனால், கடந்த அரை நூற்றாண்டாக அதில் மறைந்திருந்த மர்மங்களும், இரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிப்படத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக, 1964-ஆம் ஆண்டு முதல், ஆல்ப்ஸ் (Alps) மலைப்பகுதியில் சுமார் 45 பேர் காணாமல் போனதாகவும், அவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், 1986-ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தில், மலையேறும் போது காணாமல் போன ஜெர்மனிய நாட்டவர் ஒருவரின் சடலம், 37 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மாதம் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.