பேங்கோக், மே 3 – தென்கிழக்காசியா முழுவதும், லட்சக்கணக்கான மக்கள் கடுமையான வெப்பத்தை அனுபவித்து வரும் நிலையில், தாய்லாந்திலுள்ள, கிராமம் ஒன்றை சேர்ந்த மக்கள், மழை வரம் வேண்டி மிகவும் வித்தியாசமான முறையில், ஜப்பானிய “கார்ட்டூன்” பூனை பொம்மைகளுடன் ஊர்வலம் வருகின்றனர்.
தாய்லாந்தின் மத்திய நாகோன் சவான் பகுதியில் கடந்த பல மாதங்களாக மழை பெய்யவில்லை.
அதனால், அங்கு நீடிக்கும் வறட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டி, மக்கள் ஜப்பானின் பிரபல கார்ட்டூன்களான Doraemon, Hello Kitty போன்ற பூனை பொம்மைகளுடன் ஊர்வலம் வருகின்றனர்.
முன்பு நிஜ பூனையை கூண்டில் அடைத்து, அதனை ஊர்வலமாக கொண்டு சென்று, அதன் மீது நீரை பாய்ச்சி அந்த பிரார்த்தனை மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும்.
எனினும், தற்போது நிஜ பூனைக்கு பதிலாக கார்டூன் பூனைகள் பயன்படுத்தப்படுகின்றன.
நீரை கண்டால் பூனைகளுக்கு “அழற்சி”. பூனை மீது நீரை அடித்தால் அது சீறிப் பாயும். பூனையின் அந்த ஆவேசம் மழையை கொண்டு வரும் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கை ஆகும்.
அதன் அடிப்படையிலேயே, சுட்டெரிக்கும் வெயில் தணிந்து, மழை பொழிய வேண்டுமென கோரி மக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இவ்வேளையில், தாய்லாந்தில் பல இடங்களில், தட்ப வெப்ப நிலை 41 பாகை செல்சியல் வரை பதிவுச் செய்யப்பட்டு வருகிறது.
வெப்பம் தாளாமல் இரயில் தண்டவாளங்கள் கூட வளைந்து கிடப்பதாக கூறப்படுகிறது.
அதனால், நீரையும், ஐஸ் கட்டிகளையும் பாய்ச்சி தண்டவாளங்களை குளிச்சிப்படுத்து சீர் செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.