
பேராக்கில், மே 31-ஆம் தேதி, பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட, பாகான் டத்தோ – சேஜாகோப் பாலம் சேதமடைந்துவிட்டதாக குற்றச்சாட்டும் காணொளி ஒன்று, நேற்றிரவு சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.
குறிப்பாக, பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் வாயிலாக கீழ் இருக்கும் சுங்கை பேராக் ஆற்றை பார்க்க முடிவதாக, அதில் கூறப்பட்டுள்ளது.
எனினும், இன்று காலை அப்பாலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பாகான் டத்தோ நோக்கில் செல்லும் திசையில், சுமார் 15 மீட்டர் நீளத்திற்கு கோடு இருப்பது கண்டறியப்பட்டது.
சில குத்தகை பணியாளர்கள், அங்கு சோதனை மற்றும் பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டிருந்ததையும் காண முடிந்தது.
அப்பாலம் மூடப்படாததால், அது பயன்பாட்டிற்கு இன்னும் பாதுகாப்பானதாகவே கருதப்படுகிறது.
அதே சமயம், பாலத்தில் காணப்படும் கோடு, பாலத்தின் கட்டமைப்பில் உள்ள காண்கிரீட் விரிவடைவதற்கும், சுருங்குவதற்கும் அமைக்கப்பட்டது ஆகும் என, JKR – பொதுப் பணி துறை கூறியுள்ளது.
அதனால், பாலத்தில் எதுவும் ஏற்படவில்லை எனவும் அது தெளிவுப்படுத்தியது