வாஷிங்டன், டிசம்பர்-17, அமெரிக்கா Memphis நகரிலுள்ள Dyer’s Burgers துரித உணவகம், ஒரு நூற்றாண்டாக ஒரே எண்ணெயில் பர்கர் இறைச்சியைப் பொரித்துத் தருகிறது என்றால் நம்புவீர்களா?
நீங்கள் நம்பா விட்டாலும், அது தான் உண்மை; ஒரே எண்ணெயில் பொரிப்பது தான் தங்கள் நிறுவனத்தின் பர்கர் இறைச்சியின் கூடுதல் சுவைக்குக் காரணம் என்கிறது Dyer’s Burgers.
இப்போதிருக்கும் அதே Memphis நகரில் 1912-ல் அவ்வுணவகத்தை நிறுவினார் Elmer ‘Doc’ Dyer.
மற்ற நிறுவனங்களை விட இவரின் பர்கர் இறைச்சிகளின் சுவைத் தனித்துத் தெரிய, இன்று வரை இரகசியமாக வைக்கப்பட்டுள்ள சுவையூட்டிகளின் கலவையை அவர் பயன்படுத்தி வந்தார்.
அவர் எதிர்பார்த்தபடியே Dyer’s பர்கர் இறைச்சிகளுக்கு வரவேற்புக் குவிந்தது.
இந்நிலையில் தான் திடீரென ஒரு நாள் இரவு, சமையல்காரர்களில் ஒருவர் சட்டியிலிருந்த எண்ணெயை மாற்ற மறந்து விட்டார்.
ஆனால், அந்த பழைய எண்ணெயில் பொரித்த பர்கர் இறைச்சிகளால் தான் காட்சிகளே மாறின.
கடைக்கு வந்த வாடிக்கையாளர், பர்கரை சாப்பிட்டு விட்டு தன் வாழ்நாளிலேயே தாம் உண்ட மிக ருசியான பர்கர் என பாராட்டிச் சென்றார்.
அன்றிலிருந்து அந்தச் சட்டியில் எண்ணெய் மாற்றப்படவில்லை;
அனைத்து பர்கர் இறைச்சிகளும் அதே சட்டியில் அதே அசல் எண்ணெயில் தான் பொரிக்கப்படுகின்றன; வறுக்கப்படுகின்றன என Dyer’s நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான Kendall Robertson கூறுகிறார்.
1912-லிருந்து அதே எண்ணெய் மூலக்கூறு தான்; அதை நாங்கள் மாற்றியதே இல்லை.
அதிலிருக்கும் துகள்களை அகற்ற நாங்கள் அதை வடிகட்டுகிறோம்; பின்னர் சுவையூட்டிகளைச் சேர்க்கிறோம் என Southern Living Magazine சஞ்சிகைக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் Robertson கூறினார்.
இவரின் கடைக்கும் வரும் வாடிக்கையாளர்கள் ஒன்றோடு நிறுத்துவதில்லை; இரண்டு முதல் மூன்று பர்கர் இறைச்சித் துண்டுகளையாவது சுவைத்து விடுகின்றனர்.
எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணெய் தீர்ந்து விடுமோ என பயப்படத் தேவையில்லை என்கிறார் Robertson சிரித்துக் கொண்டே.