கோலாலம்பூர், அக்டோபர்-16 – காங்கிரீட் தடுப்புச் சுவருக்கு அந்த பக்கமாக சிக்கிக் கொண்ட தனது குட்டியை, தாய் யானைக் காப்பாற்றப் போராடும் வீடியோ வைரலாகி வலைத்தளவாசிகளை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
@jamil.amin.abdul என்ற டிக் டோக் கணக்கில் பதிவேற்றப்பட்ட வீடியோவில், தாய் யானை சுவரின் மறுமுனையிலிருந்து குட்டியை இழுக்க மெனக்கெடுகிறது.
குட்டி யானையும், தாயின் தும்பிக்கையைக் கைப்பற்றி சுவரைத் தாண்ட போராடுகிறது.
பேராக், கெரிக், பூலாவ் பண்டிங் அருகேயுள்ள மீன்வளத் துறையில் அக்காட்சி பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
ஒருவழியாக போராடி குட்டியை தன் பக்கம் இழுத்த தாய் யானை, பின்னர் அதனைக் கூட்டிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தது.
வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள், தாயின் பாசம் எல்லா உயிர்களுக்கும் ஒன்றே என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளதாக வருணித்தனர்.
சிலர் நகைச்சுவையாக, பராக்கு (கவனம் சிதறினால்) பார்த்துக் கொண்டுச் சென்றால் இப்படித் தான் தொலைந்துபோக வேண்டியிருக்கும் என, குட்டி யானையைச் செல்லமாக கடிந்துகொண்டனர்.