
கோலாலம்பூர், மார்ச்-25- அசம்பாவிதங்களைத் தவிர்க்க, பட்டாசுகளுடன் விளையாட வேண்டாம் என பொதுமக்களைப் போலீஸ் நினைவூட்டியுள்ளது.
இந்நடவடிக்கையால் கடுமையான காயங்கள், தீ விபத்துகள் மற்றும் பொது அமைதி பாதிக்கப்படலாமென தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் கூறினார்.
அனுமதியின்றி பட்டாசு கொளுத்தி விளையாடுவது, 1957-ஆம் ஆண்டு வெடிப் பொருட்கள் சட்டத்தின் கீழ் குற்றமாகும்; குற்றவாளிகளுக்கு கடுமையான அபராதங்களும் சிறைத் தண்டனையும் கூட விதிக்கப்படலாமென IGP எச்சரித்தார்.
இவ்வாண்டு இதுவரையில், கெடா மற்றும் கிளந்தானில் பட்டாசு விளையாடியதால் 2 சிறார்கள் காயமடைந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
கெடாவில், 7 வயது சிறுவன் பந்து பட்டாசை கொளுத்தி வீசும் முன்னரே அது வெடித்ததால், முகத்திலும் கையிலும் காயமடைந்தான்.
கிளந்தானில், சொந்தமாகத் தயாரித்த பட்டாசு திடீரென வெடித்ததில் 13 வயது பையனின் 3 கைவிரல்கள் துண்டாகின.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க, இந்த பெருநாள் காலத்தில் பெற்றோர்கள் மேலதிக கவனத்தோடு இருக்க வேண்டுமென IGP கேட்டுக் கொண்டார்.
பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள், மாறாக துக்க நாளாக்கி விடாதீர்கள் என அவர் அறிவுறுத்தினார்.