
கோலாலம்பூர், நவ 21 – அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற பொறியியல் மற்றும் அறிவியல் அனைத்துலக படைப்பிற்கான கண்காட்சியில் மூன்று பிரிவிகளில் கலந்துகொண்ட மாசாய் பண்டார் ஸ்ரீ அலாம் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் இரண்டு பிரிவுகளில் வெண்கலப் பதக்கங்களை வென்று பள்ளிக்கும் , ஜொகூர் மாநிலம் மற்றும் மலேசியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ,இந்தோனேசியா, ஜப்பான், ஹாங்காங் , சீனா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த 336 படைப்புக்கள் மற்றும் கண்டுப்பிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
இப்போட்டியில் பண்டார் ஸ்ரீ அலாம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கண்டுபிடிப்பு விருதை வென்றிருப்பது பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
இப்பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மூன்று குழுவாக இப்போட்டியில் கலந்து கொண்டனர். பார்வையற்றோர் உபயோகத்திற்கான சிறப்புக் காலணி, வாகன ஓட்டுனர்களுக்கான எச்சரிகையூட்டி மற்றும் புத்தகச் சுமையை இலகுவாக்கும் புத்தகப் பை ஆகிய மூன்று அறிவியல் படைப்புகளை இப்பள்ளியின் மாணவர்கள் உருவாக்கினர்.
இவற்றில் பார்வையற்றவர்களுக்கான சிறப்பு காலணிகள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கான எச்சரிக்கையூட்டி ஆகிய இரு படைப்புகள் வெண்கலப் பதக்கத்தை பெற்றுத் தந்தன.
பள்ளியை பிரதிநிதித்து காவியன், ஜோதீசன், மதுரேஷன், ஆசினி, கஷ்மீரா, டவினா நாயர், சமித்திரா சுருதி, துஷாரினி, ஹரிப்பிரியா ஆகியோர் கலந்துக் கொண்டிருந்ததாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சசிதரன் ரவி தெரிவித்தார்.
இதனிடையே இப்போட்டிக்காக மாணவர்களை தயார்படுத்திய ஆசிரியை சிவாநிதா சிவநாதம், உடன் சென்ற புறப்பாட துணைத்தலையாசிரியர் திருமதி சித்தி ஆயிஷா மற்றும் பள்ளியின் தலைமையாசிரியை நிர்மலா நீலவாணி ஆகியோருக்கும் சசிதரன் தமது பாராட்டை தெரிவித்துக் கொண்டார்.