சென்னை, நவம்பர்-16 – பல கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக், வெளிநாட்டு ஓட்டுநர்களை வேலைக்கெடுத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, துபாய், மலேசியா போன்ற நாடுகளில் பணிபுரிவதற்காகவும், போதைப்பொருள் வர்த்தகத்தை ரகசியமாக நடத்துவதற்காகவும் பணியமர்த்தியிருந்தது அம்பலமாகியுள்ளது.
அவரது அனைத்துலகப் போதைப்பொருள் கட்டமைப்பின் முக்கியத் ‘தூண்களாக’ அவர்கள் இருந்துள்ளது அமுலாக்கத் துறையான ED விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
போதைப்பொருளைப் பெற்று, அவற்றை உலர்ந்த தேங்காய், உணவுப் பொருட்கள், சோடா சாம்பல் மற்றும் வளையல்களுடன் மறைத்து ஏற்றுமதி செய்து வந்துள்ளனர்.
கடைசியாக, 3.5 லட்சம் ரூபாய் மாத சம்பளத்திற்கு துபாயில் இருந்து ஆக்லாந்திற்கு ஓட்டுநர் பணிக்கு, மூன்று பேரை சாதிக் அனுப்ப முயன்றுள்ளார்.
அவர்கள் துபாயைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களின் அடையாள அட்டைகளையும், குடியுரிமை விசாக்களையும் லஞ்சம் கொடுத்து மோசடியாகப் பெற்று நியூசிலாந்து கிளம்ப தயாரான போது, விசா சர்ச்சையால் விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது தெரிய வந்தது.
2014 முதல் 2024 வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு 237 பொட்டலங்களில் சரக்குகளை ஏற்றுமதி செய்ய டெல்லி, திருச்சி மற்றும் சென்னையில் உள்ள ஆறு முன்னணி நிறுவனங்களை சாதிக் பயன்படுத்தினார்.
அப்பொருட்கள் மலேசியாவில் 5 நிறுவனங்களுக்கும் ஆஸ்திரேலியாவில் 6 நிறுவனங்களுக்கும் நியூசிலாந்தில் ஒரு நிறுவனத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளதையும் ED கண்டறிந்துள்ளது.
போதைப் பொருட்களை விற்பனை செய்து சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி, ஜாபர் சாதிக், சினிமா இயக்குனர் அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.