Latestமலேசியா

அனைத்துலக மாணவர் முழக்கம் மாபெரும் இறுதிச் சுற்றுக்கு மலேசியா, இலங்கை மற்றும் டென்மார்க் தேர்வு !

கோலாலம்பூர், டிச 6 – வணக்கம் மலேசியா ஏற்பாட்டில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக தமிழ் வளர் மையத்தின் இணை ஆதரவில் இவ்வாண்டு 7வது முறையாக நடத்தப்பட்ட அனைத்துலக மாணவர் முழக்கம் – ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ்ப் பேச்சு போட்டியின் இறுதிச் சுற்றுக்கு மலேசியா, இலங்கை மற்றும் டென்மார்க் ஆகிய 3 நாடுகளைச் சேர்ந்த 4 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

கடந்த டிசம்பர் 4ஆம் திகதி இணையம் வழி நடத்தப்பட்ட அரையிறுதிச் சுற்றில் 9 நாடுகளைச் சேர்ந்த 18 போட்டியாளர்கள் களமிறங்கினர். இருவர் பங்கு கொள்ளும் விவாதக் களமாக நடைப்பெற்ற இந்த சுற்றில் சிறந்த வாதத்திறனை வெளிப்படுத்திய மலேசியாவைச் சேர்ந்த ஜோனஸ் அபிசியா எட்வின் மற்றும் டர்ஷினி குமரன் ஆகியோரும், இலங்கையிலிருந்து லக்க்ஷியா ரமேஸ் குமாரும், டென்மார்க்கைச் சேர்ந்த பிரனித் கிருபாகரனும் இறுதிச் சுற்றுக்கு நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.

10 முதல் 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு நடத்தப்பட்ட இந்த போட்டியில், மாணவர்களின் பேச்சுத் திறனோடு சேர்த்து, சிந்தனையாற்றல், உடனக்குடன் சிந்தித்து பதிலளிக்கும் திறன் ஆகியவையும் சோதிக்கப்பட்டன.

அந்த வகையில் நல்ல பேச்சாற்றல் திறன் இருந்தும் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகாமல் போன மலேசியாவைச் சேர்ந்த டெனிஷா சுப்ரமணியம்,இலங்கையைச் சேர்ந்த அபினவன் கணபதி பிள்ளை,இந்தியாவைச் சேர்ந்த ரித்திகாஶ்ரீ ஆறுமுகம் மற்றும் மியான்மாரைச் சேர்ந்த யுவன்ராஜ் பன்னீர்ச்செல்வம்ஆகிய 4 மாணவர்களுக்கு நட்சத்திர பேச்சாளர் என்ற சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

பல நாடுகளில் புலம் பெயர்ந்து சென்ற இந்தியர்கள் வாழ்கின்றனர். அவர்கள் அனைவருக்குமே தமிழை தினமும் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
அந்த வகையில், இந்த போட்டியில் கனடா, ஹாங் கோங், ஜப்பான், சுவீடன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களும் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என நிருபிக்க களமிறங்கி தங்களின் வாதத்திறனை வெளிப்படுத்தியுருந்தனர். அவர்களை மேலும் ஊக்குவிக்க ஜப்பானைச் சேர்ந்த ஷ்ரேயா ஶ்ரீனிவாச ராகவன்,மியான்மாரிலிருந்து குடிபெயர்ந்து சிங்கப்பூரில் வசிக்கும் ஜான்சி ரவிசந்திரன்,கனடாவைச் சேர்ந்த துவாரகா ஜீவனேசன்,ஹாங் கோங்கைச் சேர்ந்த சலீமா புஹாரி,சுவீடனைச் சேர்ந்த கிரிஷாங்கா ஷாஸ்ரா ஆகியோருக்கு தன்னம்பிக்கை பேச்சாளர் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இவ்வருட போட்டியின் நடுவர்களாக மலேசியாவைச் சேர்ந்த வழக்கறிஞர் கனல்வீரன், சமூக ஆர்வலர் செல்வமலர், மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த கவிஞர் இன்பா ஆகியோரும் தங்களது பணியைச் சிறப்பாக செய்திருந்தனர்.

வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் முத்துசாமி, அனைத்துலக மாணவர் முழக்கம் போட்டியின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளரும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக தமிழ் வளர் மையத்தின் தலைவருமான முனைவர் குறிஞ்சி வேந்தன், நாடுகளின் ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் இந்த போட்டியில் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வாண்டுக்கான மாபெரும் இறுதிச் சுற்று டிசம்பர் 18ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!