
கோலாலம்பூர், பிப் 12 – இந்நாட்டில் அனைத்து சமூகங்களும் எந்தவொரு பின்னணி மற்றும் வேறுபாடு இன்றி தரமான கல்வியை பெறுவதற்கான அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
நாட்டிலுள்ள அடிப்படை வசதியற்ற பள்ளிகளின் பிரச்சனைகள் உட்பட நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தப்படும்.
இதன் வழி பிள்ளைகள் மற்றும் எதிரகால தலைமுறையினரின் நலன்கள் பாதுகாக்கப்படும் என தாம் வலியுறுத்த விரும்புவதாக அவர் கூறினார்.
இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால் இந்நாட்டில் பள்ளிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதோடு மேலும் முன்னேற்றத்தையும் போட்டா போட்டியிடும் ஆற்றலையும் நாம் பெறமுடியும் என நேற்று Putrajaya-வில் Seri Perdana வளாகத்தில் அனைத்து மலேசிய ஆலய குழுவுடன் நடைபெற்ற தேநீர் விருந்தில் கலந்துகொண்டபோது அன்வார் தெரிவித்தார்.
கல்வி ,பொருளாதாரம் உட்பட இந்திய சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளை மனித வள அமைச்சர் வி.சிவக்குமார் எழுப்பியிருந்த கோரிக்கைக்கு பதில் தெரிவிக்கும் வகையில் உரையாற்றியபோது அன்வார் இதனை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தொழில்முனைவர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, ம.இ.காவின் தேசிய துணைத்தலைவரும் மனித வளத்துறையின் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ எம் .சரவணன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.