
கோலாலம்பூர், மே 14 – ஆலயத்தின் கருவறையைவிட, சிறந்த இடம் அன்னையின் கருவறை என்கிறார் ஒளவையார். அந்த சிறப்பு மிக்க குணநலன்களைப் பெற்ற அன்னையர்கள் அனைவருக்கும் இனிய “அன்னையர் தின நல்வாழ்த்துகள்” என கூறியுள்ளார் ம.இ.கா-வின் தேசியத் துணைத் தலைவர் மற்றும் தாப்பா நாடளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சரவணன் அவர்கள்.
அன்னையின் வயிற்றில் இருந்தே இந்த உலகத்தையும், உலக நடப்புகளையும் கவனிக்கத் தொடங்கும் குழந்தை, அவளது வளர்ப்பில் தான் நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்ல பிள்ளையாக வளர்ந்து வருகிறது.
எத்தனையோ சவால்களையும், சிக்கல்களையும் ஆண்கள் எதிர்கொள்ளும் போதிலும், கருவிலேயே பல சிக்கல்களையும், சவால்களையும் சந்திப்பதுதான் தாய்மை. அன்னையின்றி நாம் யாருமில்லை, அன்னையின்றி இவ்வுலகில்லை.
ஒரு தாயின் வளர்ப்பில் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்கும் என்பது எழுதப்படாத உண்மை. அதனால்தான் பாரதியார் பெண்களுக்குக் கல்வி முக்கியம் என்பதை அறிவுறுத்தினார். காரணம் கல்வி வீட்டையும், குழந்தைகளையும் சரியான முறையில் பராமரிக்க உதவும்.
பொறுப்புள்ள ஆளுமைகளை உருவாக்குவதில் தாயின் அற்பணிப்பு, பங்களிப்பு அளப்பரியது. அதனால், பெண்களின் தனித்தன்மை போற்றிப் பாதுக்காக்கபட வேண்டும். பெண்கள் ஒரு தாயாக தங்களுக்குள்ள பொறுப்பை உணர்ந்து மேலும் சிறக்க என் அன்பான வாழ்த்துகள் என டத்தோ ஶ்ரீ சரவணன் கூறியுள்ளார்.