
கோலாலம்பூர், செப் 16 – “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பது போல எதையும் அளவோடு எடுத்துக் கொள்வதே சிறந்தது.
அந்த பாடத்தை 22 வயது மலேசிய பெண் ஒருவர், சற்று காலம் தாழ்த்தி கற்றுக் கொண்டுள்ளார்.
ஐஸ்யா ஷகுரா எனும் பெண் ஒருவர், கடந்த ஆறு ஆண்டுகளாக அன்றாடம் நான்கு “கேன்” சுவைபானங்களை அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அந்த பழக்கத்திற்கு அவர் கொடுத்த மிகப் பெரிய விலை, 22 வயதில் நீரிழிவு நோய்க்கு இலக்கானது தான்.
நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளை அவர் வெகு விரைவிலேயே உணரத் தொடங்கினார். அடிக்கடி சிறுநீர் கழிப்பது, வெளியில் இருக்கும் போது சிறுநீரை அடக்க முடியாமல் தவிப்பது, உணவை கட்டுப்படுத்தாத போதும், ஒரே மாதத்தில் 92 கிலோகிராமிலிருந்து 84 கிலோகிராமாக எடை குறைந்தது, தலையில் ஏற்பட்ட காயம் ஆராமல் சீழ் வடிய தொடங்கியது ஆகியவை அந்த அறிகுறிகளில் அடங்கும்.
அதனை தொடர்ந்து, கடந்த ஜூன் 29-ஆம் தேதி, மருத்துவரை காண சென்ற அப்பெண்ணுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அப்பெண்ணின் இரத்தத்தில் சக்கரையின் அளவு 27-ஆக பதிவானதே அந்த அதிர்ச்சிக்கு காரணமாகும்.
உடனடியாக, பேராக், செலாமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்பட்டது. இரத்தத்தில் சக்கரை அளவு இயல்பு நிலைக்கு வரும் வரை அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
தற்போது ஐஸ்யாவின் இரத்த சக்கரை அளவு ஏழுக்கு குறைந்துள்ளது.
தற்போது மருந்துகள் உதவியுடன் வாழ்ந்து வரும் ஐஸ்யா, உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார். அதோடு, சுவை பானங்களை முற்றாக தவிர்த்து விட்ட அவர் தற்போது வெறும் கனிம நீரை மட்டுமே பருகி வருகிறார்.