கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இம்மாதம் 19 திகதி தொடங்கி 21ஆம் திகதி வரையில், இந்தியாவிற்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், இப்பயணம் இரு நாடுகளுக்கிடையே நல்லுறவை வலுப்படுத்தும் என துணையம்மச்சர் டத்தோ ரமணன் கருத்துரைத்தார்.
வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், கல்வி, தொழில்துறை உட்பட தொழில் முனைவர் மேம்பாடு, கூட்டுறவு குறித்தும் அன்வாரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் விவாதிப்பார்கள் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.
இரு தலைவர்களின் சந்திப்புக்குப் பின் பிரதமரின் நற்செய்திக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் சாந்தானந்த் ஆடிட்டோரியத்தில் (Temple of Fine Arts, Shantanand Auditorium) நேற்று நடைபெற்ற ‘ஸ்வர்ண சமரோஹா’ (Swarna Samaroha) சிறப்பு ஒடிசி நிகழ்ச்சி பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என்.ரெட்டி, மலேசியா, இந்தியத் தலைவர்களுக்கு இடையிலான அந்த சந்திப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இதனிடையே, 78ஆவது இந்தியாவின் சுந்திர தினத்தை முன்னிட்டு ஒடிசி நடனக் கலைஞர் குரு டாக்டர் கஜேந்திரா பண்டாவின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
மலேசியாவுடன் 1982-ஆம் ஆண்டு முதல் டாக்டர் கஜேந்திரா கொண்டிருக்கும் கலைத் தொடர்புகள் காரணத்தை முன்னிறுத்தி, தனது நடனக்கலைத் துறையின் 50 ஆண்டுகால நிறைவை கொண்டாடும் விதமாக, மலேசியாவில் நடன நிகழ்ச்சியை அவர் படைத்தார்.
நடன கலைகல் அனைத்து இனங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு கருவியாகும் என்று இந்நிகழ்ச்சி குறித்து தனது மகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொண்டார் தொழில் முனைவர் மேம்பாட்டு கூட்டுறவு துணையம்மசர் டத்தோ ரமணன்.
நிகழ்ச்சியின் போது இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில், தபலா, மிருதங்கம், சிதார், வீணை, தன்புரா உள்ளிட்ட பல இசைக்கருவிகளை மலேசியாவில் உள்ள முக்கிய இந்திய கலாச்சார சங்கங்களுக்கும் கலைஞர்களுக்கும் வழங்கியது.
ஏறக்குறைய 350 பேர் கலந்து கொண்ட Swarna Samaroha நிகழ்ச்சியில் இந்திய துணை தூதர் சுபாஷினி நாராயணன், முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ சுப்பிரமணியம், ஒடிசி நடனக் கலைஞர் டத்தோ ரம்லி இப்ராகிம், பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், துணையமைச்சரின் முதன்மை அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.