
கோலாலம்பூர், நவ 7- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதாக குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினரான முகமட் அஸிசி அபு நைம் அறிவித்துள்ளார். அடுத்த பொதுத் தேர்தல் வரை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அவர் தமது ஆதரவையும் தெரிவித்துக் கொண்டார். நிதியமைச்சருமான, பிரதமர் 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின்போது சமர்ப்பித்த அம்சங்களை ஆராய்ந்த பின் இந்த ஆதரவை தெரிவிப்பதாக முகமட் அஸிசி கூறினார். குவா முசாங் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள மக்களின் சமூக நலனை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் தமது இந்த முடிவு இருப்பதாக பெரிக்காத்தான் நேசனல் நாடாளுமன்ற உறுப்பினருமான முகமட் அஸிசி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
தமது நாடாளுமன்ற உறுப்பினரின் சேவைக்காலம் முடியும்வரை குவா மூசாங் நாடாளுமன்ற தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உட்பட பல்வேறு நன்மைகளை பெற முடியும் என்றும் கூறினார். பெர்சத்து கட்சிக்கு துரோகம் இழைப்பதோ அல்லது அக்கட்சியிலிருந்து வெளியேறும் நோக்கத்தை தாம் கொண்டிருக்கவில்லை என்பதோடு குவா மூசாங் நாடாளுமன்ற தொகுதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமைத்துவத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.