கோலாலம்பூர், செப்டம்பர்-30, பத்தாவது பிரதமராகப் பொறுப்பேற்று ஈராண்டுகளை நிறைவுச் செய்யவுள்ள டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாட்டுக்கும் மக்களுக்கும் பல நன்மைகளைச் செய்து வருவது கண்கூடு.
பெரும் சவால்களுக்கு மத்தியில் பொறுப்பேற்ற அவரின் மடானி அரசாங்கம் அரசியல் நிலைத்தன்மையைப் பேணி, செவ்வனே கடமையாற்றி வருகிறது.
ஆனால் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் எல்லாம் ஒரே இரவில் வந்து விடாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் Dr சேவியர் ஜெயக்குமார்.
எந்த ஆட்சி வந்தாலும் இந்தியர்கள் கண்டுகொள்ளப்படவில்லை என்பது காலங்காலமாகவே முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தான்.
ஆனால் அதற்காக இந்த ஒற்றுமை அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை என்பதெல்லாம் அபத்தம் என சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினருமான Dr சேவியர் சொன்னார்.
அரசியல் காரணங்களுக்காக சிலர் அப்படி பேசலாம்;
ஆனால இந்த ஆட்சியில் பல மாற்றங்கள் மக்களுக்கு நன்மையைக் கொண்டு வருகின்றன; மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கவும் அரசு பாடுபடுகிறதென்பதே நிதர்சன உண்மை.
டத்தோ ஸ்ரீ அன்வாரும், முன்பெந்த பிரதமரும் செய்யாத வகையில் அரசு ஊழியர்கள் குறிப்பாக மலாய்க்காரர்களின் மனப்பான்மையில் உளவியல் ரீதியாக மாற்றங்களை கொண்டு பாடுபடுகிறார்.
அரசாங்கச் சேவையளிப்பானது, எந்த பாகுபாடுமின்றி அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் வகையிலிருக்க வேண்டுமென்பதை அவர்களுக்குப் புரிய வைத்து வருகிறார்.
எனவே பக்காத்தான் ஆட்சியில் அவருடன் பங்குப் பெற்றவர்களே புறம்பேசுவது நியாயமில்லை என, ஹிண்ராஃப் கணபதி ராவை மேற்கோள் காட்டி வந்த பத்திரிகைச் செய்தியை சேவியர் சாடினார்.
இந்திய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஊடகங்கள் இடையிலான சந்திப்பில் பிரதமரின் காதுகளுக்கு வெறும் இனிப்புச் செய்திகள் மட்டுமே கொடுக்கப்பட்டன; அடிமட்ட மக்கள் பிரச்னைகள் குறித்த உண்மை நிலவரங்கள் எடுத்துரைக்கப்படவில்லை என கணபதி ராவ் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
சிலாங்கூர் பக்காத்தான் அரசில் பத்தாண்டுகள் பொறுப்பிலிருந்த கணபதி ராவ், மக்களுக்கானச் சேவையில் பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் நேர்மை மீது கேள்வியெழுப்புவது முறையல்ல என Dr சேவியர் சாடினார்.
அவரின் 10 ஆண்டுகால சிலாங்கூர் ஆட்சிகுழு உறுப்பினர் பதவி காலத்தில் எத்தனை தோட்டங்களில் வீட்டுடைமை திட்டத்தை நிறை வேற்றினார்? இவருக்கு முன் அப்பதவியில் இருந்தவர் கொண்டு வந்த தோட்டத் தொழிலாளர் வீட்டுடைமை திட்டத்தின் மீதான சட்ட வரைவை ஏன் நிறைவு செய்யவில்லை என்றும் Dr சேவியர் கேள்வி எழுப்பினார்.